சென்னை: தெலங்கானா மாடலும் திராவிட மாடலும் வியப்பை அளிக்கிறது என பாஜக முன்னாள் மாநில தலைவர் தமிழிசை விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தெலங்கானா, சத்யா திரையரங்கத்தில் புஷ்பா 2 திரைப்படத்தை காண வந்த பெண், கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்திருப்பது கவலை அளிக்கக் கூடியது. அதேநேரத்தில் கூட்டத்தைக் கட்டுப்படுத்த வேண்டியது காவல் துறையின் கடமை. ஓரிடத்தில் தேவைக்கு அதிகமான கூட்டம் சேர தொடங்கிய உடனேயே காவல்துறை கண்காணிப்பையும், கட்டுப்பாட்டையும் துரிதப்படுத்த வேண்டும்.
அசம்பாவிதம் நடக்கும் வரை பார்த்துவிட்டு பின்பு கூட்டம் கூடியதற்காக நடிகர் அல்லு அர்ஜுனை கைது செய்தது தவறான முன் உதாரணம். தும்பை விட்டுவிட்டு வாலை பிடித்த கதையாக, அல்லு அர்ஜூனின் கைது அமைந்திருக்கிறது. சென்னையிலும் வானூர்தி சாகசத்தின்போது கூட்டம் கூட தொடங்கிய உடனேயே தமிழக காவல்துறை முன்னெச்சரிக்கையுடன் நடந்திருக்க வேண்டும்.
காவல்துறையின் பாதுகாப்பு தோல்வியினால் 5 உயிர்கள் பறிபோயின. தெலங்கானா மாடலின் படி கைது நடவடிக்கை என்றால் இங்கே யாரை கைது செய்திருக்க வேண்டும், தமிழக ஆட்சியாளர்களைதானே தெலங்கானா மாடலும் திராவிட மாடலும் வியப்பைத் தான் அளிக்கின்றன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.