ராமநாதபுரம்: வருகின்ற காலத்திலாவது எல்லா தேசியத் தலைவர்களுடைய விழாவையும் எல்லா சமூகத்தினரும் கொண்டாடுகின்ற விழாவாக மாற்ற வேண்டும் என பசும்பொன் தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்திய பின் குடியரசு துணைத்தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள பசும்பொன்னில் முத்துராமலிங்கத் தேவரின் 63-வது குருபூஜை மற்றும் 118-வது ஜெயந்தி விழாவில் குடியரசு துணைத்தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் இன்று காலை 8.50 மணிக்கு பங்கேற்று தேவர் நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
தொடர்ந்து தேவர் வாழ்ந்த பூர்வீக இல்லத்தை பார்வையிடட்டு, தேவர் வழிபட்ட பூஜை அறைக்கு சென்று 5 நிமிடம் தியானத்தில் ஈடுபட்டு வழிபட்டார். தொடர்ந்து தேவர் நினைவிட பொறுப்பாளர் காந்திமீனாள் நடராஜனிடம் நலம் விசாரித்தார்.
குடியரசு துணைத்தலைவருடன் தர்மர் எம்பி, பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், மூத்த தலைவர் ஹெச்.ராஜா, மாநில பொதுச்செயலாளர் கருப்பு முருகானந்தம், மாவட்ட தலைவர் முரளிதரன் ஆகியோர் சென்று தேவர் நினவவிடத்தில் மரியாதை செலுத்தினர்.
அதன்பின் குடியரசு துணைத்தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஒரு சித்தர் புருஷர். சத்தியத்தையும், வாய்மையையும் தவிர வாழ்க்கையில் எதனையும் கடைப்பிடிக்காத ஒரு மகத்தான சித்தர். தேவர் ஏதோ ஒரு சமுதாயத்தை மட்டுமே சார்ந்தவர் என்று நினைப்பது நம்முடைய அறியாமையைத்தான் காட்டுகிறது.
அவர் வாழ்ந்த காலத்தில் அத்தனை சமுதாயத்தையும் தன்னோடு அழைத்துச் சென்று தலைமையேற்றவர். பிற சமூகத்திற்கு அவர் எதிராக இருந்திருந்தால், பேரையூர் வேலுச்சாமி நாடார் இல்லத்திலே எத்தனை முறை உணவருந்தி இருப்பார். எத்தனை முறை தங்கி இருப்பார். இன்னொரு சமூகத்தைச் சேர்ந்த பெருமாளை சட்டப்பேரவை உறுப்பினராக்கி தன்னோடு பயணிக்க வைத்தவர்.
தன்னுடைய ஜமீன் சொத்தில் பெரும் பகுதியை மாற்று சமூகத்தினருக்கு தந்தவர். எல்லாவற்றையும் விட மிகச் சிறந்த தேசபக்தர், நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் தளபதியாய், அவருடைய முழு நம்பிக்கைக்குரிய பாத்திரமாய் இருந்தவர். நேதாஜி ஃபார்வர்ட் பிளாக் என்ற கட்சி தொடங்கியபோது, காங்கிரஸில் இருந்து விலகி தன் வாழ்நாள் முழுவதும் அந்த இயக்கத்திலேயே பயணித்தவர்.
முன்னாள் பிரதமர் நேரு, தேவருக்கு தமிழக முதல்வர் பதவி தருவதாகச் சொன்னபோது கூட, எனக்கு பதவி பெரிதல்ல, என்னுடைய தலைவர் நேதாஜி சுபாஷ் சந்திரபோசுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு நியாயம் கிடைக்க வேண்டும். அதுவரை நான் உங்களை எதிர்த்து போராடுவேன் எனக்கூறிய வீரத்திருமகன் தேவர்.
தேவரைப் போற்றுவது தேசியத்தைப் போற்றுவது, தெய்வீகத்தைப் போற்றுவது. அவரைப் போற்றுவது தனிமனித நல்லொழுக்கம். இம்மண்ணை விட்டு ஒருபோதும் மறையாது இருக்க வேண்டும் என்கின்ற உயர்ந்த சிந்தனையைப் போற்றுவது. கடந்த 25 ஆண்டு காலமாக, நான் அவருடைய நினைவை மனதிலே கொண்டு, தேவர் நினைவிடத்திற்கு வந்து அஞ்சலி செலுத்தி வருகிறேன்.
இந்தாண்டு குடியர துணைத் தலைவராக பொறுப்பேற்று, தமிழகத்திற்கு முதல் வருகையாக அவருக்கு அஞ்சலி செலுத்துகின்ற நிகழ்வு இருக்க வேண்டும் என்கின்ற உணர்வோடு வந்திருக்கிறோம். தேவர் புகழ் இந்த புவி இருக்கிற வரைக்கும் நீடித்திருக்கும். தயவுசெய்து நான் எல்லா சமூகத்தினரையும் வேண்டுவது, வருகின்ற காலத்திலாவது எல்லா தேசியத் தலைவர்களுடைய விழாவையும் எல்லா சமூகத்தினரும் கொண்டாடுகின்ற விழாவாக மாற்ற வேண்டும்.
எதாவது ஒரு சாதியிலே தான் ஒரு மனிதன் பிறக்க முடியும். சாதியை மாற்றிக் கொள்கின்ற வல்லமை யாருக்கும் இல்லை. ஆனால், எல்லா சமூகத்தினரும் ஒன்று சேர்ந்து, ஒற்றுமையாய் இந்த தமிழ் மண்ணுடைய வளர்ச்சிக்கும், இந்திய தேசத்தினுடைய வளர்ச்சிக்கும் பங்காற்றிட முடியும். அந்த உயர்ந்த சிந்தனை மனதிலே கொண்டு நம்மிடத்திலே இருக்கின்ற வேறுபாடுகளை நாம் மறப்பதுதான் உண்மையிலேயே நாம் நம்முடைய பெரியவர்களுக்குச் செலுத்துகின்ற அஞ்சலி என கூறினார்.
முன்னதாக மதுரையிலிரு்து விமானப்படை ஹெலிகாப்டர் மூலம் பசும்பொன் தேவர் நினைவிடம் அருகேயுள்ள ஹெலிபேட் தளத்தில் வந்திறங்கிய குடியரசு துணைத் தலைவரை ராமநாதபுரம் ஆட்சியர் சிம்ரன்ஜீத் சிங் காலோன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜி.சந்தீஷ் ஆகியோர், மலர் கொத்து கொடுத்து வரவேற்றனர். அங்கிருந்து தேவர் நினைவிடம் வந்த குடியரசு துணைத் தலைவரை தேவர் நினைவிட பொறுப்பாளர் காந்திமீனாள் நடராஜன் குடும்பத்தினர் வரவேற்றனர். அதனையடுத்து அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் மதுரை புறப்பட்டுச் சென்றார்.