சென்னை: வந்தே மாதரம் பாடலின் 150 வது ஆண்டினை கொண்டாடி தேசத்தைப் பாதுகாத்து, நாட்டை முன்னேற்றி, நாமும் முன்னேறுவோம் என தமிழ் மாநில காங்கிரஸ் (மூ) தலைவர் ஜி.கே. வாசன் எம்.பி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்திய நாட்டு மக்களின் ஒற்றுமைக்கும், இந்திய தேசியத்தின் உணர்வுக்கும் வந்தே மாதரம் பாடலானது தேசிய பாடலாக ஒலிக்கப்படுகிறது. 150 ஆண்டுகளுக்கு முன்பாக இயற்றப்பட்டு 1896 ம் ஆண்டில் ரவீந்திரநாத் தாகூர் முதன்முறையாக இதனைப் பாடினார்.
நாளை நவம்பர் 7-ம் தேதியன்று வந்தே மாதரத்தின் 150-வது ஆண்டில் நுழைய இருக்கிறோம். இந்நிலையில் தேச பக்தி மிக்க வந்தே மாதரம் பாடலின் 150 வது ஆண்டு விழாவை நாட்டு மக்கள் கொண்டாட வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி மனதின் குரல் வானொலி நிகழ்சியின் மூலம் தெரிவித்தது பெரிதும் போற்றுதலுக்குரியது.
ஆழ்ந்த அர்த்தத்துடன் கூடிய உணர்வுப்பூர்வமான தேசிய பாடலில் வந்தே மாதரம் என்ற சொல்லானது சக்தி வாய்ந்த சொல்லாக நாட்டு மக்களின் உணர்வுகளை தூண்டுகிறது. பாரதத் தாயின் அன்பில், அரவணைப்பில் நாட்டு மக்கள் ஒன்றிணைந்து செயல்பட விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் தேசிய பாடல் அமைந்திருப்பது பெரும் மகிழ்ச்சிக்குரியது.
எனவே இந்தியராகிய நாமெல்லாம் தேசிய பாடலான வந்தே மாதரத்தை தொடர்ந்து போற்றி, பாடி நமது அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு தாய்நாட்டின் பற்றை, கலாச்சாரத்தை, உணர்வை, ஒற்றுமையை, விழிப்புணர்வை கொண்டு செல்வோம்.
வரலாற்று சிறப்பு மிக்க தேசிய பாடலில் வந்தே மாதரம் என்ற சொல்லானது 140 கோடி மக்களுக்கும் பாரதத் தாயின் புத்துணர்ச்சியாக அமைவதால் வந்தே மாதரம் பாடலின் 150 வது ஆண்டினை கொண்டாடி தேசத்தைப் பாதுகாத்து, நாட்டை முன்னேற்றி, நாமும் முன்னேறுவோம் என்று தமிழ் மாநில காங்கிரஸ்(மூ) சார்பில் தெரிவித்துக்கொள்கிறேன்” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.