தேசிய கீதங்கள்: திருத்தங்கள், மாற்றங்கள், காரணங்கள் countries National Anthems: Amendments, Changes, Reasons

dinamani2F2025 05 162Fqvg0uydd2FP 4162475649
Spread the love

எங்குமுள்ள மொழிச் சிக்கல்களை இயன்றவாறு தவிர்க்கச் சில நாடுகள் இப்போதைக்கு இசையை மட்டுமே பேச விட முடிவு செய்துள்ளன. உலகெங்கிலும் உள்ள நான்கு நாடுகளின் கீதங்களுக்கு  (ஸ்பெயின், கொசாவோ, போஸ்னியா மற்றும் ஹெர்சகோவினா, சான் மரினோ) அங்கீகரிக்கப்பட்ட பாடல் வரிகள் இல்லை.

போஸ்னியா மற்றும் ஹெர்சகோவினாவில் 1999 ஆம் ஆண்டு ஒரு புதிய கீதம் ஏற்றுக்கொள்ளப்பட்டது.ஆனால் பாடல் வரிகள் எழுதப்பட்டு ஒப்புக் கொள்ளப்படும்வரை அது முதலில் வார்த்தைகள் இல்லாமல்தான் இருந்தது. இசைக்கு ‘இன்டர்மெக்கோ’ என்று பெயரிடப்பட்டது. ஆனால் கீதம் ‘ட்ரஜாவ்னா ஹிம்னா போஸ்னே ஐ ஹெர்சகோவின்’ (போஸ்னியா மற்றும் ஹெர்சகோவினாவின் தேசிய கீதம்) என்று அழைக்கப்படுகிறது. இக்கீதத்தில் நாட்டிலுள்ள எந்த இனப் பிரிவுகளின் மொழிச்சார்பையும் தவிர்க்கும் நோக்கில் மொழியை விடுத்து இசைக்கருவி மட்டுமே அளிக்கும் கீதத்தை ஏற்றுக் கொண்டிருப்பதும் நல்லிணக்க நோக்கம் கொண்டதெனலாம்.

சர்ச்சைக்குரியவற்றைத் தவிர்த்தல் என்ற வகையில் சில நாடுகள் வேதனையான, பிளவுபடுத்தும் வரலாறுகளை, நினைவுகளைத் தூண்டும் பாடல் வரிகள் அல்லது மெல்லிசைகளை அகற்றுகின்றன. ஸ்பெயின் கொடுங்கோல் மன்னரான பிராங்கோ சகாப்த பாடல் வரிகளை முற்றிலும் கைவிட்டது; சர்வாதிகாரி காலத்தில் ‘மார்ச்சா கிரனாடெரா’ என்ற பழைய கீதம் ‘மார்ச்சாரியல்’ ஆக மாற்றப்பட்டிருந்தது. தற்போது அது சொற்களற்ற இசையொலியாக மட்டும் உள்ளது.

அதுபோலவே கொசோவோ அரசாங்கம் நாட்டிலுள்ள ஒரு மொழி அல்லது இனக் குழுவிற்கு முன்னுரிமை வழங்கப்படுவதை விரும்பாததால்- இன, மொழி நடுநிலை காட்டத்- தனது தேசிய கீதத்தை (‘’ஐரோப்பா’’)  2008 இல் பாடல் இல்லாத இசைக் கீதமாக ஏற்றுக் கொண்டது. சான்மரினோ அரசு, பல ஆண்டுகளாக தேசபக்தி நிகழ்வுகளில் ஒரு அதிகாரப்பூர்வமற்ற கீதமாக – ஒரு இராணுவ அணிவகுப்பு இசையைப் பயன்படுத்தி வருகிறது. அதிகாரப்பூர்வ பாடல் வரிகள் இல்லாவிட்டாலும் ஜியோசுயே கார்டுசி எழுதிய அதிகாரப்பூர்வமற்ற பாடல் வரிகள் அந்த இசையில் உள்ளன. தனது நடுநிலையான தன்மையை வெளிப்படுத்த இந்நாடு, 1894 முதல் கருவி கீதத்தையே வைத்துக் கொண்டிருக்கிறது.

வரலாற்று அடையாளத்தை மீட்டெடுத்தல் என்ற நோக்கில் சில நாடுகள் அடிப்படை விழுமியங்கள் அல்லது தேசியப் பெருமையை மீட்டெடுக்கப் பழைய கீதங்களுக்கு மீண்டும் திரும்புகின்றன. எடுத்துக்காட்டாக, ‘எழுந்திரு, ஓ தோழர்களே’ என்பது நைஜீரியா தேசிய கீதமாக மாறிக் கிட்டத்தட்ட ஐந்து தசாப்தங்களுக்குப் பிறகு, மே 29, 2024இல் ஜனாதிபதி போலா டினுபு ‘நைஜீரியா, நாங்கள் உன்னை வாழ்த்துகிறோம்’ என்ற (1960) பாடலை மீண்டும் கொண்டு வருவதற்கான சட்டத்தில் 2024இல் கையெழுத்திட்டார். அதன்படி,  நைஜீரியா தனது பழைய1960 கீதத்தை மீண்டும் அதிகாரப்பூர்வமாக்கியுள்ளது. இந்தக் கீத மாற்றத்திற்கான முதன்மையான உந்துதல் தனது கடந்த காலத்துடன் நைஜீரியா கொண்டுள்ள உணர்வுப்பூர்வமான பிணைப்பாகும். முந்தைய கீதத்திற்குத் திரும்புவதன் மூலம், நைஜீரியா அதன் வரலாற்று அடையாளத்தின் ஒரு பகுதியைப் பெருமிதமாக ஒப்புக்கொள்கிறது.

இவ்வாறாக, வரலாறு முழுவதும் அரசியல் எழுச்சிகள், சுதந்திர இயக்கங்கள், சமூக மாற்றங்கள், பாலின சமத்துவம், பழங்குடிகளை உள்ளிணைத்தல் (Inclusive) போன்ற புதிய விழைவுகளை, யதார்த்தங்களைப் பிரதிபலிக்கும் நோக்கங்கள் முதலிய பல காரணங்களில் ஏதாவது ஒன்றோ பலவோ  நாடுகளின் தேசிய கீதங்களுக்கு மாற்று அல்லது இருக்கும் கீதங்களில் திருத்தம் (சொல் நீக்கம், சேர்த்தல், மாற்றியமைத்தல்) போன்ற செயல்பாடுகளைத் தூண்டியுள்ளன. ‘ஜன கன மன’ இந்திய தேசிய கீதமாக ஏற்கப்படும் முன்பும், ஏற்கப்பட்ட பின்னரும் சில தாக்குதல்களுக்கு உள்ளாகி 75 ஆண்டுகளாக நிலைத்திருக்கும் வரலாற்றைப் பிறகு பார்க்கலாம். அரசியல் புனிதமெனக் கருதப்படும் தேசிய கீதங்களும் திருத்தப்பட உரியவைதான் எனும் நிதர்சனத்தைத் தற்காலத்தில் உணர்கிறோம்.

[பி.கு.:உலக நாடுகளின் தேசிய கீதங்கள் குறித்த மிக விரிவான மேலதிகத் தகவல்களுக்கு: ‘உலகின் தேசிய கீதங்கள்’, எடிட். மார்ட்டின் ஷா & ஹென்றி கோல்மேன், பிட்மேன் பப்ளிஷிங் கார்ப்பரேஷன் லண்டன், நியூயார்க், டொராண்டோ 1960; ‘தேசிய கீதங்களின் கலைக்களஞ்சியம்’ எடிட். ஜிங்ஹாங், திஸ்கேர்க்ரோபிரஸ், இன்க். லான்ஹாம், மேரிலாந்து மற்றும் ஆக்ஸ்போர்டு 2003; ‘உலகின் தேசிய கீதங்கள்’, (பதினொன்றாவதுபதிப்பு) மைக்கேல் ஜேமிசன் பிரிஸ்டோ, வீடன் ஃபீல்ட் & நிக்கோல்சன், 2006 ஆல் திருத்தப்பட்டது].  

[கட்டுரையாளர் – கல்லூரி, பல்கலைக்கழகப் பணி நிறைவுக்குப் பின் உயர் நீதிமன்ற வழக்குரைஞர்]

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *