சென்னை: தேசிய கீதமும், தமிழ்த்தாய் வாழ்த்தும் இந்தியாவிற்கும், தமிழகத்திற்கும் பெருமை சேர்க்கும் பாடல்கள் என்பதால் அவற்றை சரியாகப் பாட வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் (மூ) தலைவர் ஜி.கே. வாசன் எம்.பி வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கை: தேசிய கீதம் இந்தியாவிற்கு எப்படி பெருமை சேர்க்கிறதோ அதே போல தமிழ்த்தாய் வாழ்த்தும் தமிழகத்திற்கு பெருமை சேர்க்கிறது. இவற்றில் உள்ள வரிகளின் உச்சரிப்பு மிகவும் முக்கியம். வரும் நாட்களில் இதில் பிழை என்பதே எந்த விழாக்களிலும் இருக்கக்கூடாது. தேவைப்பட்டால் இதற்குண்டான ஒத்திகை எடுப்பதும் முக்கியம். தமிழ்த்தாய் வாழ்த்தில் அரசியல் கூடாது.
இதனுடைய நோக்கமே தமிழ்நாடு, தமிழ்வளர்ச்சி, தமிழ்பற்று. இதில் தவறு கண்டுபிடிக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் ஆதாயத்திற்கும், விளம்பரத்திற்கும் மட்டுமே இருக்கக்கூடும். தேசிய கீதமும், தமிழ்த்தாய் வாழ்த்தும் இந்தியாவிற்கும், தமிழகத்திற்கும் பெருமை சேர்க்கும் பாடல்கள் என்பதால் அவற்றை சரியாகப் பாட வேண்டும் என்பதையே குறிக்கோளாகக்கொண்டு செயல்பட வேண்டும் என்பதை தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.