தேனியில் பொதுமக்கள் நீர்நிலைகளுக்கு செல்வதை தடுக்க போலீஸ் கண்காணிப்பு   | Police protecting public from water places in Theni

1343340.jpg
Spread the love

போடி: கனமழையினால் மாவட்டத்தில் உள்ள பல நீராதாரங்களிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஆகவே, இப்பகுதிக்குச் செல்ல மாவட்ட நிர்வாகம் தடைவிதித்துள்ளது. மேலும், போலீஸார் கண்காணிப்பிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

தேனி மாவட்டத்தில் சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதனால், மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் சிற்றாறுகள் உருவாகி ஆங்காங்கே உள்ள ஆறுகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. குறிப்பாக மூலவைகை மற்றும் வைகையின் துணை ஆறுகளான வராகநதி, கொட்டக்குடி, பாம்பாறு உள்ளிட்டவற்றிலும் தண்ணீர் அதிகளவில் சென்று கொண்டிருக்கிறது. இதனால் அணைகளின் நீர்மட்டம் வெகுவாய் உயர்ந்து வருகிறது.

இந்நிலையில் ஆறுகளிலும் இறங்கவோ, செல்ஃபி எடுக்கவோ, வேடிக்கை பார்ககவோ செல்ல கூடாது என்று மாவட்ட ஆட்சியர் ஆர்.வி.ஷஜீவனா தடை உத்தரவு பிறப்பித்துள்ளார். இருப்பினும் சிலர் ஆர்வ மிகுதியால் அப்பகுதியில் சென்று கொண்டிருக்கின்றனர். இதுபோன்ற நிலையைத் தடுக்க ஆறுகளின் வழித்தடத்தில் உள்ள உள்ளாட்சி அமைப்புகள் சார்பில் கண்காணிப்பும், தடுப்பு நடவடிக்கையும் மும்முரப்படுத்தப்பட்டுள்ளது.

போடி அணைப்பிள்ளையார் கோயில் தடுப்பணை உள்ளிட்ட பகுதியில் போலீஸார் சுழற்சி முறையில் கண்காணித்து பொதுமக்கள் இப்பகுதிக்குச் செல்ல விடாமல் தடுத்து வருகின்றனர். மேலும் போடிமெட்டு, கம்பம்மெட்டு, குமுளி மலைச்சாலைகளிலும் மண்சரிவு, மரம் விழுதல் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டு வருகின்றன. ஆகவே இரவு நேரத்தில் சுற்றுலா பயணிகளும், ஐயப்ப பக்தர்களும் இச்சாலையைக் கடந்து செல்ல வேண்டாம் என்றும் மாவட்ட நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *