தேனி: காலநிலை மாற்றத்தால் மலைச்சாலைகளில் மூடுபனியின் தாக்கம் அதிகரித்துள்ளது. ஆகவே ஐயப்ப பக்தர்கள் மற்றும் சுற்றுலா வாகனங்கள் கவனமுடன் கடந்து செல்ல வேண்டும் என்று நெடுஞ்சாலைத்துறையினர் வலியுறுத்தி உள்ளனர்.
தேனி மாவட்டத்தில் கேரளாவை இணைக்கும் மலைச்சாலைகளாக குமுளி, போடிமெட்டு, கம்பம்மெட்டு வனப் பகுதிகள் அமைந்துள்ளன. மேலும் உள்மாவட்டத்துக்குள் மேகமலை, அடுக்கம், அகமலை உள்ளிட்ட மலைச் சாலைகளும் உள்ளன. தற்போது இப்பகுதிகளில் லேசான சாரலுடன், மிதமான வெயில் பருவ நிலையும் நீடித்து வருகிறது. இதனால் இச்சாலைகளில் மூடுபனியின் தாக்கம் அதிகரித்துள்ளது.
மலைத்தொடர்கள், பள்ளத்தாக்கில் இருந்து கிளம்பும் இந்த மூடுபனி சாலையின் வெகுதூரம் வரை மறைத்து விடுகிறது. வெள்ளை நிறத்துடன் அடர்த்தியாக சாலையின் வெகுதூரம் வரை இந்த பனி மேவி இருப்பதால் வாகன இயக்கத்தில் தடுமாற்றம் ஏற்படுகிறது. இதனால் பலரும் பகலிலேயே முகப்பு விளக்குகளை ஒளிரச் செய்தபடி இப்பகுதிகளை கடந்து செல்கின்றனர்.

இது குறித்து நெடுஞ்சாலைத்துறையினர் கூறுகையில், போடிமெட்டு-மூணாறு மலைச்சாலையில் மூடுபனியின் தாக்கம் அதிகம் உள்ளது. ஆகவே வாகனங்களை மெதுவாக இயக்க வேண்டும். சில நாட்களில் சபரிமலை சீசன் தொடங்க உள்ளது. ஆகவே குமுளி, வண்டிப் பெரியாறு மலைச் சாலையை கடந்து செல்லும் ஐயப்ப பக்தர்கள் அனுபவமான ஓட்டுநர்கள் மூலமே வாகனங்களை இயக்க வேண்டும் என்றனர்.