ஐயப்ப பக்தர்களுக்காக தேனி ரயில் நிலையத்தில் இருந்து பம்பைக்கு கேரள அரசுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்பு பேருந்து இயக்கப்படுகிறது.
சபரிமலையின் முக்கிய வழித்தடமாக தேனி மாவட்டம் அமைந்துள்ளது. தமிழகம் மட்டுமல்லாது கர்நாடகா, தெலங்கானா, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் இந்த வழித்தடத்தின் வழியே கடந்து செல்கின்றனர். இவ்வாறு செல்லும் பக்தர்கள் மாவட்ட எல்லையான குமுளியில் இருந்து வண்டிப்பெரியாறு, முண்டக்காயம், எரிமேலி வழியாக பம்பை செல்கின்றனர்.
சென்னை உள்ளிட்ட வெகுதூரத்தில் இருந்து வருபவர்கள் தேனி வரை ரயிலில் வந்து பின்பு பேருந்து நிலையம் சென்று பின்பு அங்கிருந்து பயணிக்கின்றனர். இதனால் இவர்களுக்கு சிரமம் ஏற்படும் நிலை இருந்தது. ஆகவே ரயில் நிலையத்தில் இருந்து சிறப்பு பேருந்தை இயக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதனைத் தொடர்ந்து கேரள அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் தற்போது இங்கிருந்து சிறப்பு பேருந்து இயக்கப்படுகிறது. தேனிக்கு வாரம் 3 முறை சென்னையில் இருந்து காலை 8.45-க்கும், மதுரையில் இருந்து தினசரி ரயில் காலை 9.45-க்கும் வருகிறது. இதைக் கணக்கிட்டு காலை 10 மணிக்கு இந்த சிறப்பு பேருந்து இயக்கப்படுகிறது.
இங்கிருந்து பேருந்து கட்டணமாக கம்பத்துக்கு ரூ.41, குமுளிக்கு ரூ.64, வண்டிப்பெரியாறுக்கு ரூ.104, குட்டிக்கானத்துக்கு ரூ.148, முண்டக்காயத்துக்கு ரூ.183, எருமேலிக்கு ரூ.203, பம்பைக்கு ரூ.292 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஐயப்ப பக்தர்கள் மட்டுமல்லாது இதர பயணிகளும் கம்பம், குமுளி வழியாக நேரடியாக கேரளாவின் பல்வேறு பகுதிகளுக்குச் செல்லும் வசதி கிடைத்துள்ளது.
இதுகுறித்து கேரள அரசு போக்குவரத்துக் கழக நடத்துநர் மகாதேவ் கூறுகையில், மண்டல, மகர பூஜைக்கான சிறப்பு பேருந்தாக இது இயக்கப்படுகிறது. சென்னை உள்ளிட்ட வெளிமாநில பக்தர்கள் தேனி ரயிலில் காலை 8.45-க்கு வருகிறார்கள். இங்குள்ள ஓய்வறையில் குளித்து, பூஜை செய்துவிட்டு பேருந்தில் ஏற உரிய நேரம் உள்ளது. இதேபோல் மதுரை ரயில் 9.45-க்கு வந்ததும் அதில் வரும் பக்தர்களும் இந்தப் பேருந்தை பயன்படுத்திக் கொள்ள முடியும், என்றார்.