சென்னை: தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்தின் தாயார் அம்சவேணி நேற்று காலமானார். அவருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், பொருளாளர் எல்.கே.சுதீஷ் ஆகியோரின் தாயார் அம்சவேணி(83) உடல்நலக் குறைவு காரணமாக கடந்த சில நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று காலை காலமானார். அவரது உடல் சென்னை சாலிகிராமத்தில் உள்ள சுதீஷ் வீட்டுக்கு கொண்டு வரப்பட்டு இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
இதையடுத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று அம்சவேணியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். முதல்வருடன் அமைச்சர்கள் எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, மா.சுப்ரமணியன் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர். அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி, முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியினர், திரைப்பிரபலங்கள் அஞ்சலி செலுத்தினர்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட இரங்கல் செய்தியில், “தேமுதிக பொதுச்செயலாளர் சகோதரி பிரேமலதா விஜயகாந்த் தாயார் அம்சவேணி மறைவெய்திய செய்தியறிந்து மிகவும் வருந்தினேன். பெற்றெடுத்து அன்பு செலுத்தி வளர்த்த அன்னையை இழந்துவாடும் பிரேமலதா விஜயகாந்துக்கு எனது ஆழ்ந்த இரங்கல்” என தெரிவித்தார்.
பிரேமலதாவின் தாயார் மறைவுக்கு, பாமக நிறுவனர் ராமதாஸ், பாமக தலைவர் அன்புமணி, தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன், தமாகா தலைவர் ஜி.கே.வாசன், தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொகிதீன், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.