இந்தியாவில் ஒரே நாளில் வாக்கு எண்ணிக்கை முடிவுற்றதை, அமெரிக்க தேர்தல் வாக்கு எண்ணிக்கையுடன் ஒப்பிட்டு எலான் மஸ்க் விமர்சித்துள்ளார்.
இந்தியாவில் மகாராஷ்டிரம், ஜார்க்கண்டில் பேரவைத் தேர்தல் மற்றும் ராஜஸ்தான், மேற்கு வங்கம், அஸ்ஸாம், பிகார், கர்நாடகம், மத்தியப் பிரதேசம், சிக்கிம், கேரளம், சத்தீஸ்கர், மேகாலயம், குஜராத் ஆகிய மாநிலங்களில் நடைபெற்ற இடைத்தேர்தல்களின் வாக்கு எண்ணிக்கையும் சனிக்கிழமை (நவ. 23) நடைபெற்றது. பதிவான வாக்குகள் ஒரே நாளில் எண்ணப்பட்டு, முடிவுகளும் அறிவிக்கப்பட்டன.
இந்த நிலையில், அமெரிக்க அதிபர் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை நவ. 6 ஆம் தேதி அதிகாலை முதலே எண்ணப்பட்டு, இன்று (நவ. 24) வரையில் எண்ணிக்கை தொடரப்பட்டு வருவதை டெஸ்லா உரிமையாளர் எலான் மஸ்க் விமர்சித்துள்ளார்.
எலான் மஸ்க், தனது எக்ஸ் பதிவில் தெரிவித்திருப்பதாவது, “இந்தியாவில் ஒரே நாளில் 640 மில்லியன் வாக்குகள் எண்ணப்பட்டு விட்டன. ஆனால், கலிஃபோர்னியாவில் இன்னும் எண்ணப்பட்டு வருகிறது’’ என்று குறிப்பிட்டுள்ளார்.