தேர்தலுக்குத் தயாராகும் அதிமுக: 82 மாவட்ட பொறுப்பாளர்களை நியமித்து இபிஎஸ் உத்தரவு! | AIADMK prepares for elections: In-charges appointed for all 82 party districts!

1351204.jpg
Spread the love

சென்னை: தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலுக்கு தயாராகும் விதமாக அதிமுக சார்பில் கட்சி ரீதியிலான 82 மாவட்டங்களுக்கும் பொறுப்பாளர்களை நியமித்து பொதுச்செயலாளர் பழனிசாமி இன்று (பிப்.17) உத்தரவிட்டுள்ளார்.

தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு உள்ள நிலையில், மாநில கட்சிகளும், தேசிய கட்சிகளும் தங்கள் தேர்தல் கணக்கை இப்போதே தொடங்கிவிட்டன. சத்தமில்லாமல் ஆயத்த பணிகளையும் மேற்கொண்டு வருகின்றன. தமிழகத்தில் பிரதான எதிர்க்கட்சியும், 30 ஆண்டுகளுக்கு மேல் ஆட்சியில் இருந்த கட்சியுமான அதிமுகவும், 2026 தேர்தலுக்கு தயாராகி வருகிறது.

ஏற்கெனவே ஜெயலிலதா பேரவை சார்பில் அதிமுகவின் சாதனைகள் மற்றும் திமுக அரசின் குறைபாடுகளை பொதுமக்களிடம் விளக்கி திண்ணை பிரச்சாரத்தை அக்கட்சி தொடங்கியுள்ளது. அனைத்து வாக்குச்சாவடிகளிலும், பொறுப்பாளர்களை நியமிக்கும் பணிகளையும் முடுக்கிவிட்டுள்ளது. திமுகவை எதிர்க்கும், அதிமுகவின் கொள்கைகளுக்குப் பொருத்தமான கட்சிகளை ஒருங்கிணைத்து கூட்டணி அமைப்பது குறித்தும் மூத்த தலைவர்களுடன் பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார்.

முன்னதாக, தமிழகம் முழுவதும் மாவட்ட வாரியாக தொகுதி நிலவரம் அறிவதற்காக, அந்தந்த தொகுதிகளில் கட்சியின் பலம், பலவீனம், உட்கட்சி மோதல், நிர்வாகிகள் மத்தியில் நிலவும் பனிப்போர், 2026 தேர்தலில் அதிமுகவுக்கான வெற்றி வாய்ப்புகள், செல்வாக்குள்ள நிர்வாகிகள் உள்ளிட்ட விவரங்களை அறிந்துகொள்வதற்காக கள ஆய்வுக் கூட்டங்களை நடத்தி முடித்துள்ளது. இதன் தொடர்ச்சியாக திங்கள்கிழமை கட்சி ரீதியில் செயல்பட்டு வரும் மாவட்டங்களுக்கான தேர்தல் பொறுப்பாளர்களையும் பழனிசாமி நியமித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்“தமிழகத்தில் நடைபெற உள்ள 2026 சட்டப்பேரவை தேர்தலையொட்டி, சட்டப்பேரவை தொகுதி வாரியாக வாக்குச்சாவடி குழு அமைப்பது, கட்சி வளர்ச்சி பணிகளை துரிப்படுத்துவது, ஏற்கெனவே வழங்கப்பட்ட உறுப்பினர் அட்டைகள் அனைத்தும் அனைவருக்கும் சென்று சேர்ந்ததா என கண்காணிப்பது, கட்சியில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள இளம் தலைமுறை, விளையாட்டு வீரர்கள் அணியில் உறுப்பினர்களை சேர்ப்பது முதலான பணிகளை மாவட்ட செயலாளர்களுடன் இணைந்து விரைவாக முடிப்பதற்காக கட்சி ரீதியிலான 82 மாவட்டங்களுக்கும் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அதன்படி, திருவள்ளூர் வடக்கு மாவட்ட பொறுப்பாளராக முன்னாள் அமைச்சர் சி.பொன்னையன், திருப்பத்தூர் மாவட்டத்துக்கு முன்னாள் மத்திய அமைச்சர் தம்பிதுரை, திருச்சி புறநகர் தெற்கு மாவட்டத்துக்கு செ.செம்மலை, மதுரை மாநகர் மாவட்டத்துக்கு பா.வளர்மதி, திருச்சி மாநகர் மாவட்டத்துக்கு எஸ்.கோகுல இந்திரா, கரூர் மாவட்டத்துக்கு எம்.சின்னசாமி, ராணிப்பேட்டை மேற்கு மாவட்டத்துக்கு சேவூர் எஸ்.ராமச்சந்திரன் நியமிக்கப்பட்டுள்ளனர்.

காஞ்சிபுரம் மாவட்டத்துக்கு வைகைச்செல்வன், கடலூர் மேற்கு மாவட்டத்துக்கு அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளர் ஆர்.கமலக்கண்ணன், வேலூர் புறநகர் மாவட்டத்துக்கு செஞ்சி ராமச்சந்திரன், தென்காசி தெற்கு மாவட்டத்துக்கு அன்வர் ராஜா, திருவள்ளூர் தெற்கு மாவட்டத்துக்கு இன்பதுரை, தென் சென்னை தென்கிழக்கு மாவட்டத்துக்கு வி.சரோஜா உள்ளிட்டோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

பொறுப்பாளர்கள் அனைவரும் உடனடியாக தொடர்புடைய மாவட்டங்களுக்கு நேரில் சென்று, தலைமை அறிவுறுத்தியுள்ள அனைத்து பணிகளையும் விரைவாக முடித்து, அதன் விவரங்களை மார்ச் 31-ம் தேதிக்குள் கட்சி தலைமையிடம் சமர்ப்பிக்க வேண்டும்,” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *