தேர்தலுக்கு முன் மதுக்கடைகளை மூடினால் மீண்டும் திமுக ஆட்சி: திருமாவளவன் உறுதி @ விசிக மாநாடு | Thirumavalavan speech at vck maanadu

1320844.jpg
Spread the love

உளுந்தூர்பேட்டை: வரும் சட்டமன்ற தேர்தலுக்கு முன் மதுக்கடைகளை மூடினால் மீண்டும் திமுக ஆட்சிக்கு வரும். அதற்கு முன் சட்டமன்றத்தில் தேசிய மதுவிலக்கை அமல்படுத்த தீர்மானம் நிறைவேற்றவேண்டும் என்று விசிக மது ஒழிப்பு மாநாட்டில் திருமாவளவன் பேசினார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் மது மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு மகளிர் மாநாடு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணை அமைப்பான மகளிர் விடுதலை இயக்கம் சார்பில் புதன்கிழமை விசிக தலைவர் தொல்.திருமாவளவன் தலைமையில் நடைபெற்றது.

இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் பேசியதாவது: ”நான் உங்களுக்கு நன்றி சொல்லக் கடமைப்பட்டுள்ளேன். கடந்த மக்களைத் தேர்தலில் மாபெரும் வெற்றியை கொடுத்தீர்கள். இம்மாநாட்டின் சிறப்பே லட்சக்கணக்கான பெண்கள் திரண்டு வந்ததுதான். மதுவிலக்கு என்பது நம் புத்தர் காலத்திலிருந்தே பேசப்பட்டு வருகிறது. ஞான வம்சத்தில் இருந்து வந்தவன். சாதி மத பெருமைகளை நான் பேசவில்லை. இதுவரை நாம் பயன்படுத்தாதவர்களை இப்போது மதுவை வேண்டாமென்று சொன்ன காந்தியையும், ராஜாஜியையும் கௌரவப்படுத்துகிறோம்.

முதலில் செப்டம்பர் 17-ம் தேதி அறிவிக்கப்பட்டது. அன்று பாமகவின் தியாகிகள் தினம் என்பதால் எதிரும் புதிருமாக வரக்கூடாது என்பதால்தான் இந்நாளை தேர்வு செய்யப்பட்டது. புத்தர் உலகம் முழுவதும் மதுவிலக்கை சொன்னார். இந்த எளியவன் தமிழகத்தில், இந்தியாவில் சொல்கிறேன். எந்த மதமும் மதுவை ஆதரிக்கவில்லை. அரபு நாடுகளில் மதுக்கடைகளை காணமுடியாது. திருவள்ளுவர் கள்ளுண்ணாமை என்ற அதிகாரத்தை எழுதியுள்ளார்.

உலகம் போற்றும் மகான்கள் யாரும் மதுவை ஆதரிக்கவில்லை. இந்த அடிப்படையில்தான் மதுவை வேண்டாம் என்றோம். 2015-ம் ஆண்டு திருச்சியில் மதுவிலக்கு மாநாட்டை நடத்தி, துண்டறிக்கைகளை வெளியிட்டோம். மதம் மாறிய அம்பேத்கர் ஏற்றுக்கொண்ட மதுவை தொடமாட்டேன் என்று உறுதிமொழி ஏற்றுக்கொண்டார். உடனே தமிழகத்தில் மட்டும் திருமாவளவன் மது வேண்டாம் என்கிறார் என்று அரைவேக்காடுகள் கூறுகிறார்கள். நான் இந்தியா முழுவதும் மதுவிலக்கு வேண்டும் என்கிறேன்.

மதுவுக்கு பெரியார், மார்க்ஸ் அடிமையாகி இருந்தால் அவர்கள் நமக்கு கிடைத்து இருப்பார்களா? மதுவுக்கு அடிமையானால் மனிதவளம் அழியும். இதில் அரசியல் பேசவேண்டாம் என்றேன். உடனே நான் அதிமுகவிற்கு அழைப்பு விடுத்தேன் என்றும், கூட்டணி மாறப்போகிறேன் என்று இம்மாநாட்டின் நோக்கத்தை சிதைத்துவிட்டார்கள். சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 18 மாதங்கள் உள்ளது.

காவிரி, இலங்கை பிரச்சினைக்காக நாம் இணைந்து பேசவில்லையா? அப்படி இதை பேசி இருக்கவேண்டும். உலர்ந்த நாள் என்பதெல்லாம் சும்மா. முதல்நாளே வாங்கி வைத்துக்கொள்கிறார்கள். இந்தியா முழுவதும் 7- 8 நாட்கள் மட்டுமே மதுக்கடைகளை மூடப்படுகிறது. திமுகவிற்கு கொள்கை அடிப்படையில் மதுவை ஒழிக்க உடன்பாடு உள்ளது. ஆனால் அதில் நடைமுறை சிக்கல் உள்ளது.

அண்ணா மதுவிலக்கை தளர்த்தவில்லை. மதுக்கடைகளை மூட சொல்லி தமிழக அரசுக்கும், மத்திய அரசுக்கும் கோரிக்கை வைக்கிறோம். மதுவிலக்கை நடைமுறைப்படுத்தும் மாநிலங்களுக்கான இழப்பீடை மத்திய அரசு தரவேண்டும் என்று கலைஞர் கூறினார். பின்னர் 1974-ம் ஆண்டு மதுவிலக்கு அமல்படுத்தப்பட்டது. அதன்பின் மதுவிலக்கை தளர்த்தியது யார்? டாஸ்மாக்கை உருவாக்கியது யார்? இதை வாதாடுபவர்கள் என்ன சூழ்ச்சியில் பேசுகிறார்கள் என்பதை சொல்கிறேன். தமிழக முதல்வர் ஸ்டாலினா மதுக்கடைகளை திறந்தார். வரும் சட்டமன்ற தேர்தலுக்கு முன் மதுக்கடைகளை மூடினால் மீண்டும் திமுக ஆட்சிக்கு வரும். அதற்கு முன் சட்டமன்றத்தில் தேசிய மதுவிலக்கை அமல்படுத்த தீர்மானம் நிறைவேற்றவேண்டும்.

தேர்தல் அரசியல் வேண்டாம் என்ற நிலையைகூட நான் எடுக்க தயாராக உள்ளேன். ஆளுநர் வருகையால் காந்தி மண்டபத்தில் என்னை அனுமதிக்கவில்லை. ஆனால் நான் காந்தியை அவமதித்துவிட்டதாக முன்னாள் ஆளுநர் தமிழிசை கூறுகிறார். மதசார்பின்மையை சொன்னதற்காக காந்தி சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த மேடைக்கு வந்த தலைவர்களால் விசிகவின் நோக்கம் மேம்பட்டுள்ளது”இவ்வாறு திருமாவளவன் பேசினார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *