தேர்தல் ஆணைய வழிகாட்டுதலை பின்பற்றியே வாக்காளர் பெயர் நீக்கம்: சத்யபிரத சாஹூ தகவல் | Deletion of voter s name following Election Commission guidelines

1308387.jpg
Spread the love

சென்னை: வாக்காளர் பட்டியலில் இருந்து பெயரை நீக்குவது தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையம் வகுத்துள்ள வழிகாட்டுதல்கள் முழுமையாக பின்பற்றப்படுவதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தெரிவித்துள்ளார்.

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, கடந்த ஆக.20 முதல் அக்.18ம் தேதிவரை, வீடுவீடாக சென்று வாக்குச்சாவடி நிலை அலுவலர் வாக்காளர் பட்டியல் சரிபார்த்தல், வாக்காளர் புகைப்பட அடையாள அட்டையில் உள்ள முரண்பாடுகளை நீக்குதல், வாக்காளர் பட்டியலில் நல்ல தரமான புகைப்படங்களை இணைத்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த சூழலில், தேர்தல் ஆணையம் தன்னிச்சையாக வாக்காளர் பட்டியலில் பெயர்களை நீக்குவதாகவும், இறந்தவர்கள், முகவரி மாறியவர்கள், குறிப்பிட்ட முகவரியில் ஆய்வின் போது இல்லாதவர்கள் பெயர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கம் செய்யும் போது, தேர்தல் ஆணையம் வகுத்துள்ள விதிகளை பின்பற்ற வேண்டும் என்பதை குறிப்பிட்டு திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சமீபத்தில், தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூவுக்கு கடிதம் அனுப்பினார். இதற்கிடையில், தமிழக மாநில தேர்தல் ஆணையம் மாநிலம் முழுவதும் உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்கான ஆரம்ப கட்டபணிகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, வாக்காளர் பட்டியலை கேட்டு, தலைமை தேர்தல் அதிகாரிக்கு கடிதம் அனுப்பியது.

இவை தொடர்பாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ கூறியதாவது: “தன்னிச்சையாக நாங்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர்களை நீக்க முடியாது. அதற்கென தேர்தல் ஆணையம் பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. வீடுகளில் இல்லாத நிலை, முகவரி மாற்றம், இறப்பு ஆகிய காரணங்களுக்காக பெயர் நீக்கம் செய்யப்படுகிறது. வீடுகளில் வாக்காளர் இல்லை என்பதும், முகவரி மாற்றம் என்பதும் பலமுறை கள ஆய்வு செய்து உறுதி செய்யப்படும். ஒருவர் இறந்துவிட்டால், உறவினர்களிடம் இருந்து படிவம்-7 பெற்ற பின்னரே நீக்கப்படும்.

மேலும், ஒருவர் பெயர் இரண்டு இடத்தில் இருக்கும் பட்சத்தில், ஒரு இடத்தில் பெயரை நீக்க தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதல்படி, வாக்காளருக்கு கடிதம் அனுப்பப்பட்டு, 2 வார கால அவகாசத்துக்குப்பின்னர், மீண்டும் கள ஆய்வில் உறுதி செய்த பின்னரே பட்டியலில் இருந்து பெயர் நீக்கப்படும். தற்போது திமுக சார்பில் கடிதம் அளிக்கப்பட்டுள்ள நிலையில், அக்கடிதம் மற்றும் தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளை இணைத்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் அனுப்பியுள்ளோம்.

வாக்காளர் பட்டியலை மாநில தேர்தல் ஆணையம் கோரி கடிதம் அனுப்பியிருந்தது. தற்போது வாக்காளர் பட்டியலை நாங்கள் யாருக்கும் வழங்க முடியாது. இந்திய தேர்தல் ஆணையத்துக்குத்தான் அதற்கான அதிகாரம் உள்ளது. எனவே மாநில தேர்தல் ஆணையத்தின் கடிதம் இந்திய தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பப்பட்டது. அந்த கடிதம் தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையம் தற்போது கடிதம் அனுப்பியுள்ளது.

மேலும், மாநிலங்கள் வாக்காளர் பட்டியலை கோரும் போது அதற்கென வழிகாட்டுதல்களையும் இந்திய தேர்தல் ஆணையம் வகுத்துள்ளது. புகைப்பட வாக்காளர் பட்டியலை மாநில தேர்தல் ஆணையம் கோருவதால், இதில், சில விஷயங்கள் குறித்து கேள்வி எழுப்பி அதற்கு மாநிலத் தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்த பின், பட்டியலை வழங்க தேர்தல் ஆணையம் அனுமதித்துள்ளது. தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டு நெறிமுறைகள் படி, மாநிலத் தேர்தல் ஆணையத்துக்கு வாக்காளர் பட்டியல் வழங்கப்படும்,” என்று அவர் கூறினார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *