தேர்வு எழுதும் மாணவர்களுக்கான பிரத்யேக நட்சத்திர பலன்கள்! – Kumudam

Spread the love

மாணவர்கள் கல்வியில் சிறக்க மகத்தான பரிகாரங்கள்!

– யதார்த்த ஜோதிடர் ஷெல்வீ

10  மற்றும் 12-ம் வகுப்பு மாணவ செல்வங்கள் பொதுத்தேர்வுகளை எழுத தொடங்கி  இருக்கிறார். அதே போன்று 1 முதல் 9-ம் வகுப்பு வரையிலும் மாணவ செல்வங்கள் இறுதித்தேர்வை எழுத போகிறார்கள். தேர்வுகளை எழுத இருக்கும் மாணவசெல்வங்களுக்கான நட்சத்திர பலன்களை பார்ப்போம்.

 

அஸ்வினி

 

தன்னம்பிக்கையும் தைரியமும் மிக்கவர் நீங்கள். கேது தசையில் பிறந்த உங்களின் மாணவப் பருவம், சுக்ர தசை வரை நீடிக்கும். இயல்பாகவே எதையும் சட்டெனப் புரிந்துகொள்ளும் ஆற்றல் உங்களுக்கு உண்டு. அதேசமயம் சோம்பல்தனத்தால் உங்கள் வெற்றிகளுக்கு நீங்களே தடையாக இருப்பீர்கள். எனவே சோம்பலை சோம்பல்படாமல் விரட்டினால் பெரும் சாதனைகள் செய்யலாம்.

வெளிநாட்டுக் கல்வி, கல்விக்கடன் தொடர்பான உங்களின் முயற்சிகள் நிச்சயம் ஈடேறும். அதேசமயம் முயற்சிகளைத் தொடங்கும்முன் பக்கத்துக் கோயிலில் உள்ள கணபதியை அறுகு சாத்தி வழிபடுவது சிறப்பான பலன் தரும்.

சிறுவயதிலேயே சங்கீதம், ஓவியம், விளையாட்டு என ஏதாவது ஒரு பயிற்சியிலாவது ஈடுபடுவது உங்கள் மனம் ஒன்றிய செயல்பாட்டுக்கு உதவும். மனம் ஒருமைப்பட்டால் மட்டுமே மறதி உங்களை அணுகாமல் இருக்கும். தினமும் உடற்பயிற்சி செய்வதும், மனப்பயிற்சி செய்வதும் நல்லது.

திங்கட்கிழமைகளில் காலை 6.15 முதல் 6.45க்குள் 5 அகல்தீபங்களை ஏற்றி இஷ்ட தெய்வத்தை வழிபடுங்கள். நவகிரக சூரியனை வழிபடுவதும் நல்லது. 3 வருடத்துக்கு ஒருமுறை பிள்ளையார்பட்டி சென்று வருவது சிறப்பான நற்பலன் தரும். மாணவப் பருவத்தின் முடிவில் திருக்கொள்ளிக்காடு திருத்தலம் சென்று பொங்கு சனி பகவானை வழிபட்டு வந்தால் தொழில் அமைப்பு சிறப்பாக அமையும்.

 

பரணி

 

முயற்சிகளால் எதையும் சாதிக்கலாம் என்ற நம்பிக்கை உள்ளவர் நீங்கள். உங்களின் மாணவப்பருவம், சுக்ரதசையில் தொடங்கி, சூரியதசை வரை இருக்கும். சிலருக்கு சந்திர தசை வரை இருக்கலாம்.

எதிலும் முழுமையான ஈடுபாட்டுடன் செயல்படக்கூடிய நீங்கள், முக்கியமான சமயங்களில் ஏற்படக்கூடிய திடீர் மனக்குழப்பத்தால் சோர்ந்து விடுவீர்கள். என்றாலும் உடனடியாக அதிலிருந்து விடுபடுவீர்கள். எதையும் உணர்ச்சிவசப்பட்டு சட்டெனத் தீர்மானிப்பதைத் தவிர்த்து திட்டமிட்டுச் செயல்பட்டால் இந்தக் குழப்பத்தைத் தவிர்க்கலாம்.

இயல்பாக நல்லவரான நீங்கள், சட்டென உணர்ச்சி வசப்படுவதாலும், யோசிக்காமல் வார்த்தைகளைக் கொட்டுவதாலும் வாய்ப்புகளை இழப்பீர்கள். எனவே, தினமும் சில நிமிடமாவது தியானம் செய்வது நல்லது. வாகனப்பயணத்தில் வேகம் தவிர்ப்பதும் அவசியம். அஜீரணபாதிப்பு, எலும்புத் தேய்மானம், சளித்தொந்தரவுகளில் அலட்சியம் கூடாது.

வெள்ளிக்கிழமைகளில் காலை 6.15 முதல் 6.45 வரை இஷ்டதெய்வத்திற்கு தீபம் ஏற்றி வழிபடுங்கள். புதிய முயற்சிகளுக்கு முன் பள்ளி கொண்ட பெருமாளை தரிசியுங்கள். 3 வருடத்திற்கு ஒருமுறை ஸ்ரீரங்கம் சென்று வருவது சிறந்த பலன் தரும். மாணவப் பருவத்தின் இறுதியில், திருநள்ளாறு சென்று சனிபகவானை தரிசனம் செய்து வருவது, செழிப்பான பணி அமைய அடித்தளமாக உதவும்.

 

கிருத்திகை

 

திட்டமிட்டும் திறமையாகவும் செயல்படக்கூடியவர் நீங்கள். உங்களின் மாணவப்பருவம், சூரியதசை முதல், செவ்வாய் தசை வரை இருக்கும். ஒரு சிலருக்கு ராகு தசையிலும் படிப்பு தொடரலாம். எதையும் யோசித்தும், முழுமையாகத் திட்டமிட்டும் செய்யக்கூடிய நீங்கள் பிடிவாதத்தையும், வீண் கோபத்தையும் தவிர்த்தால் மட்டுமே விசேஷ பலன்களைப் பெறலாம். பெற்றோர் பெரியோர் ஆலோசனைகளை அலட்சியப்படுத்தாமல் ஏற்பது நல்லது. அயல்நாடு சென்று படிக்கும் வாய்ப்பு உங்களுக்கு எளிதாகக் கைகூடும். அதேசமயம் எதிர்பால் நட்புகளால் ஏமாற்றப்படலாம், எச்சரிக்கையாக இருங்கள்.

சட்டென உணர்ச்சி வசப்படுவதும், வீண்பிடிவாதமும் உங்கள் இயல்பு. என்றாலும், அதனால் ஏற்படும் தீய விளைவுகளை நினைத்து மனதைக் கட்டுப்படுத்துவதும், விட்டுக் கொடுத்துப் போவதும் நல்லது. காது, மூக்கு, தொண்டை, ஒற்றைத் தலைவலி பாதிப்புகளை உடனுக்குடன் கவனியுங்கள்.

புதன்கிழமைகளில் காலை 6.15 முதல் 6.45க்குள் இஷ்டதெய்வத்தின் முன் 5 அகல்தீபம் ஏற்றி வழிபடுங்கள். புதிய முயற்சிகள் எதையும் தொடங்கும் முன் ராகவேந்திர மகானை தரிசனம் செய்யுங்கள். 3 வருடத்திற்கு ஒருமுறை பஞ்சவடி சென்று அனுமனை ஆராதிப்பது சிறப்பான பலன் தரும். மாணவப் பருவம் நிறைவடைந்ததும், குச்சனூர் சென்று சனிபகவானை தரிசித்து வாருங்கள். குறைவில்லா எதிர்காலம் அமையும்.

 

ரோகிணி

 

அமைதியான செயல்களால் ஆனந்தம் காணக்கூடியவர் நீங்கள். சந்திர தசையில் பிறந்த உங்களின் மாணவப் பருவம், ராகு தசை வரை தொடரும். எதிலும் பரபரப்பு இல்லாமலும் பதற்றப்படாமலும் செயல்படக்கூடியவர் நீங்கள். அதேசமயம் இதுவா அதுவா என்று சரியாகத் தீர்மானிக்க முடியாமல் குழம்பவும் செய்வீர்கள். அதற்கு உங்களின் அதீத உணர்ச்சிவசப்படலே காரணம். தன்னம்பிக்கை இருந்தாலும் தெளிவான திட்டமிடல் முக்கியம் என்பதை நீங்கள் உணர்ந்தால் எல்லாமே வெற்றியாகும்.

வெளிநாட்டுக் கல்வி வாய்ப்புகள் கைகூடி வரும்போது உங்கள் மனக்குழப்பத்தால் அதைத் தவிர்க்க நினைக்கலாம். ஆனால், இறைவனை வழிபட்டும், பெற்றோர் ஆலோசனை கேட்டும் செயல்பட்டால், முன்னேற்றம் முடுக்கி விடப்படும்.

ஆடம்பரம், கேளிக்கையில் நாட்டம் உள்ளவர் நீங்கள். படிக்கும் காலத்தில் நட்புகளின் கட்டாயத்திற்காக இரவு நேரக் கேளிக்கை, ஆடம்பரப் பந்தயங்களில் ஈடுபடாமல் இருப்பது அவசியம். நரம்பு உபாதைகள், சுவாசக் கோளாறுகளில் அலட்சியம் கூடாது.

திங்கட்கிழமைகளில் காலை 6.15 முதல் 6.45க்குள் இஷ்ட தெய்வத்தின் முன் 5 அகல்தீபம் ஏற்றி வழிபடுங்கள். புதிய முயற்சிகளின்போது, ராகவேந்திரரை வழிபாடு செய்யுங்கள். 3 வருடத்திற்கு ஒருமுறை திருவண்ணாமலை சென்று தரிசியுங்கள். பள்ளிப்பருவம் முடிந்ததும், திருப்பதி சென்று ஓர் இரவு தங்கியிருந்து வேங்கடவனை தரிசனம் செய்யுங்கள். உங்கள் மனம் போல் வேலை கிடைத்து வாழ்க்கை வெளிச்சமாகும்.

மிருகசீரிஷம்

விடாமுயற்சியும் துணிவும் உள்ளவர்கள் நீங்கள். செவ்வாய் தசையில் பிறந்த உங்களின் மாணவப் பருவம், ராகு தசை வரை இருக்கும். துணிவுடன் செயல்படக்கூடிய நீங்கள் பணிவும் உங்கள் செயல்களில் இருக்கும்படி பார்த்துக்கொண்டால், வெற்றி உங்கள் வசமாகும். மனதில் ஏற்படும் வீண் குழப்பங்களை வளரவிடாமல் தடுக்க தியானம், யோகா பழகுவது நல்லது. தெளிவான மனதில் பாடங்கள் நன்கு பதியும். நேரடி முயற்சிகளால் வெளிநாட்டுக் கல்வி வாய்ப்பு கைகூடும்.

அயல்நாட்டுக் கல்வி வாய்ப்பில் முயற்சிகளில் தேக்கம் கூடவே கூடாது. வங்கிக்கடன் பெற நேர்வழியே நல்லது. குறுக்குவழி விரைவில் பலன் தந்தாலும் அது சீக்கிரமே எதிர்மறைப் பலனையும் தந்துவிடலாம். தவிர்ப்பது நல்லது. இரவு நேரத்தில் வெகு நேரம் கண்விழித்துப் படிப்பதைவிட அதிகாலையில் எழுந்து படிப்பது நல்லது. கூடாத நட்புகளைக் கழட்டிவிடுவதில் தயக்கம் கூடவே கூடாது. அலர்ஜி, காயம்படுதல் போன்றவற்றில் அலட்சியம் தவிர்ப்பது அவசியம்.

வெள்ளிக்கிழமைகளில் காலை 6.15 முதல் 6.45க்குள் இஷ்ட தெய்வத்தின் முன் தீபம் ஏற்றி வழிபடுங்கள். புதிய முயற்சிகளுக்கு முன் நவகிரக ராகு பகவானை வழிபடுங்கள். 3 ஆண்டிற்கு ஒருமுறை வைத்தீஸ்வரன் கோயில் சென்று வழிபட்டு வாருங்கள். பள்ளிப்பருவம் முடிந்ததும், திருச்செந்தூர் சென்று 39 லட்டுகளை தானமளித்து, பின் உரிய முறைப்படி முருகனை வழிபட்டு வாருங்கள். உரிய பணி கிடைத்து வாழ்க்கை உயர்வாகும்.

தொடரும்.. 

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *