திருமுல்லைவாயிலைச் சேர்ந்த கதிரவனும் இதேபோன்றதொரு குற்றச்சாட்டை முன்வைக்கிறார்.
“எனது மகன், 2023-ல் அம்பத்தூரில் ஒரு அரசு உதவிபெறும் பள்ளியில் 8ம் வகுப்பு படித்தபோது, மத்திய அரசு தேசிய வருவாய் வழி மற்றும் தகுதித் தேர்வை எழுதினார். அதில் தேர்ச்சி பெற்று உதவித்தொகை பெறுவதற்கான தகுதியையும் அடைந்தார். ஆனால் இப்போதுவரை உதவித்தொகை கிடைக்கவில்லை. கல்வித்துறை அதிகாரிகளிடம் கேட்டால், ‘ஆதார், வங்கி கணக்கு எண் உள்ளிட்ட மாணவர்களின் விவரங்களை உரிய காலத்துக்குள் பள்ளிக் கல்வித்துறையிடம் பள்ளி நிர்வாகம் ஒப்படைக்கவில்லை’ என்கிறார்கள்.
ஆனால், தேர்வில் தேர்ச்சி பெற்ற சில தினங்களிலேயே அந்த ஆவணங்களை பள்ளியில் ஒப்படைத்து விட்டோம். பள்ளி நிர்வாகத்திடம் கேட்டபோது, ‘ஆவணங்களை இணையத்தில் ஏற்றமுடியவில்லை’ என்றார்கள். கல்வித்துறை அதிகாரிகளோ, ‘இணையத்தில் ஏற்ற முடியாவிட்டால் அஞ்சலில் அனுப்பியிருக்கலாமே’ என்கிறார்கள். நான் மாவட்ட கல்வி அலுவலகத்துக்கும் பள்ளிக்கும் அலைந்து அலுத்துவிட்டேன்.
இதுமாதிரியான தகுதித்தேர்வுகளில் தேர்ச்சி பெற்று உதவித்தொகை பெறும்போது மாணவர்களுக்கு ஆர்வமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். ஆனால் தேர்ச்சி பெற்றும் உதவித்தொகை கிடைக்காதபோது எதிர்மறையான விளைவுகளே ஏற்படும்.
இது தொடர்பான நான் சி.எம் செல் வரைக்குமே புகார் அனுப்பிவிட்டேன். கடைசியில், ‘பெற்றோர் உரிய ஆவணங்களை உரிய காலக்கட்டத்துக்குள் வழங்காததால் உதவித்தொகையைப் பெற்று வழங்கமுடியவில்லை’ என்று சொல்லி முடித்துவிட்டார்கள். இவர்கள் சொல்வதுபடி பார்த்தால் ‘என் மகன் உதவித்தொகை பெற முடியாமல் போனதற்குக் காரணம் எனது மகன் தான்’. அதிகாரிகள் மட்டத்திலும் ஆசிரியர்கள் மட்டத்திலும் இருக்கும் இதுமாதிரியான அலட்சியங்கள் அகற்றப்பட வேண்டும். இல்லாவிட்டால் மாணவர்களை உற்சாகப்படுத்த கொண்டு வந்த இந்தத் திட்டங்களே மாணவர்களைச் சோர்வடைய வைத்துவிடும்” என்கிறார் கதிரவன்.
புதிது புதிதாக திட்டங்களை அறிவிப்பதோடு அரசுக்கு கடமை முடிந்து விடுவதில்லை. அதிகாரிகள் அதை சரிவர பயனாளிகளுக்குக் கொண்டு சேர்க்கிறார்களா என்பதையும் கண்காணிக்க வேண்டும். தவறிழைக்கும் அரசு ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசுப்பள்ளிகள் மீது கவனம் குவிந்து வருகிற இந்தச்சூழலில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் நேரடியாக கவனம் காட்ட வேண்டிய விவகாரம் இது.!