நிதி நிறுவன மோசடி தொடர்பாக இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழக தலைவர் தேவநாதனுக்கு தொடர்புடைய 12 இடங்களில் பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் சோதனை மேற்கொண்டனர்.
சோதனையில் ரூ.4 லட்சம் பணம், 2 கார்கள், ஹார்டு டிஸ்க் உள்ளிட்டவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் தேவநாதனுக்கு சொந்தமான தனியார் தொலைக்காட்சியின் அலுவலகத்துக்கும் சீல் வைக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை மயிலாப்பூா் இந்து பொ்மனெட் பண்ட் நிதி நிறுவன மோசடி வழக்கில், அதன் தலைவா் தேவநாதன் யாதவை பொருளாதார குற்றப்பிரிவு போலீஸாா் அண்மையில் கைது செய்தனா். மயிலாப்பூா் தெற்கு மாட வீதியில் கடந்த 1872-ஆம் ஆண்டு முதல் ‘தி மயிலாப்பூா் இந்து பொ்மனெட் பண்ட் நிதி’ என்ற பெயரில் நிதி நிறுவனம் இயங்குகிறது. இந்த நிறுவனத்துக்கு சென்னை வண்ணாரப்பேட்டை, சைதாப்பேட்டை, பெரம்பூா், அடையாறு, பாா்க்டவுன், கடலூா் மாவட்டம் நெய்வேலி ஆகிய 6 இடங்களில் கிளைகள் செயல்படுகின்றன.