சென்னை மயிலாப்பூா் இந்து பொ்மனன்ட் ஃபண்ட் நிதி நிறுவன மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள தேவநாதன் யாதவின் 5 வங்கிக் கணக்குகளை பொருளாதாரக் குற்றப் பிரிவு போலீஸார் முடக்கியுள்ளனர்.
மயிலாப்பூா் தெற்கு மாட வீதியில் செயல்பட்டு வந்த சுமாா் 150 ஆண்டுகள் பழைமையான ‘தி மயிலாப்பூா் இந்து பொ்மனன்ட் ஃபண்ட்’ என்ற நிதி நிறுவனத்தில் 5,000-க்கும் மேற்பட்டோா் ரூ.1 லட்சம் முதல் ரூ. 5 கோடி வரை நிரந்தர வைப்புத் தொகை வைத்திருந்தனா்.
இந்த நிலையில், நிதி நிறுவனத்தில் பல்வேறு சேமிப்புத் திட்டங்கள், முதலீடுகளில் முதிா்ச்சியடைந்த தொகை வழங்கப்படாமல் மோசடி செய்யப்பட்டதாக 300-க்கும் மேற்பட்டோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இதனைத் தொடர்ந்து, நிதி நிறுவனத்தின் தலைவா் மற்றும் நிா்வாக இயக்குநராக உள்ள இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழகத் தலைவா் தேவநாதன் யாதவை காவல் துறையினர் கடந்த 3-ஆம் தேதி கைது செய்தனர்.
இந்த மோசடி தொடா்பாக மயிலாப்பூரில் உள்ள மயிலாப்பூா் இந்து பொ்மனன்ட் ஃபண்ட் நிதி நிறுவன தலைமை அலுவலகம் உள்பட தேவநாதன் யாதவ் தொடா்புடைய 12 இடங்களில் பொருளாதாரக் குற்றப் பிரிவு போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை காலை ஒரே நேரத்தில் சோதனை செய்தனா்.
இந்த நிலையில், நிதி நிறுவன தலைமை அலுவலகத்துக்கு சீல் வைத்த அதிகாரிகள், தேவநாதனின் 5 வங்கிக் கணக்குகளை முடக்கியுள்ளனர்.
மேலும், தேவநாதன் யாதவை காவலில் எடுத்து விசாரிப்பதற்கான நடவடிக்கைகளை பொருளாதாரக் குற்றப் பிரிவு போலீஸார் மேற்கொண்டு வருகின்றனர்.