கமுதி: தேவர் குருபூஜை விழா பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி டேவிட்சன் தேவாசிர்வாதம் தலைமையில் காவல்துறை அதிகாரிகளுடனான ஆலோசனக் கூட்டம் நடைபெற்றது.
ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் நடைபெற இருக்கும் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை விழாவை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி டேவிட்சன் தேவாசிர்வாதம் தலைமையில், தென்மண்டல ஐஜி பிரேம்ஆனந்த் சின்ஹா, ராமநாதபுரம் சரக டிஐஜி அபிநவ்குமார், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜி.சந்தீஷ் மற்றும் எஸ்பிகள், டிஎஸ்பிகளுடனான ஆலோசனைக் கூட்டம் கமுதி தனி ஆயுதப்படை அலுவலகத்தில் இன்று (அக்.10) மாலை நடைபெற்றது.
இதனை தொடர்ந்து ஏடிஜிபி பசும்பொன்னில் தேவர் நினைவிடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்து, நினைவிட பொறுப்பாளர்கள் சார்பில் அமைக்கப்பட்டு வரும் இரும்பு தடுப்புக் கம்பிகள் ஏற்பாடுகளை பாராட்டினார். மேலும் தேவர் குருபூஜை விழாவில் பங்கேற்கும் அமைச்சர்கள், அரசியல் கட்சி தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் வந்து செல்லும் பாதை ஆகியவற்றை பார்வையிட்டார். இந்த ஆய்வின்போது ஆட்சியர் சிம்ரன்ஜீத் சிங் காலோன், விருதுநகர், சிவகங்கை மாவட்டங்களைச் சேர்ந்த காவல்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் உடனிருந்தனர். முன்னதாக தேவர் நினைவாலய பொறுப்பாளர்கள் தங்கவேலு, பழனி, ராஜா உள்ளிட்டோர் காவல்துறை அதிகாரிகளை வரவேற்றனர்.