டெல்லியில் குடியரசுத் தலைவர் மாளிகையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு பத்மவிருதுகள் வழங்கும் விழா, நடைபெற்றது. இதில் மறைந்த நடிகர் விஜயகாந்துக்கு வழங்கப்பட்ட பத்ம பூஷண் விருதை அவரது மனைவியும், தே.மு.தி.க. பொதுச் செயலாளருமான பிரேமலதா, குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவிடம் இருந்து பெற்றுக் கொண்டார்.
நடிகர் விஜயகாந்துக்கு பத்ம பூஷண்
இந்த நிலையில் பத்ம பூஷன் விருதுடன் நேற்று பிரேமலதா விமானத்தில் சென்னை வந்தார். அப்போது விமான நிலையத்தில் திரண்டு இருந்த தே.மு.தி.க.தொண்டர்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் பிரேமலதா விஜயகாந்த் கட்சி தொண்டர்கள் புடைசூழ விமானநிலையத்தில் இருந்து கோயம்பேட்டில் உள்ள விஜயகாந்த் நினைவிடம் வரை பேரணியாக சென்றார். அப்போது, பிரேமலா திறந்தவெளி வாகனத்தில் பத்மபூஷன் விருதைக் காட்டியபடி சென்றதாக தெரிகிறது. இதைத்தொடர்ந்து அவர் விஜயகாந்தின் நினைவிடத்தில் பத்மபூஷன் விருதை வைத்து அஞ்சலி செலுத்தினார். இந்த பேரணியின் போது கடும் வாகன நெரிசலும் ஏற்பட்டது.
தே.மு.தி.க.வினர் 20 பேர் மீது வழக்கு
இதற்கிடையே தேர்தல் விதிமுறை அமலில் உள்ள நிலையில் போலீசார் மற்றும் அதிகாரிகளிடம் அனுமதியின்றி சென்னை விமான நிலையத்தில் இருந்து கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க. தலைமை அலுவலகம் வரை பேரணியாகச் சென்றதாக ஆலந்தூர் தேர்தல் அதிகாரி போலீசில் புகார் செய்தார்.
அதன் அடிப்படையில் தே.மு.தி.க. மாநில வழக்கறிஞர் அணி துணை செயலாளர் சந்தோஷ் குமார் உள்ளிட்ட தே.மு.தி.க.வினர் 20 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி கூட்டம் கூட்டியதாக 7 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். இதில் சென்னை விமான நிலையத்தில் அதிக கூட்டத்தை கூட்டி போக்குவரத்துக்கு இடையூறு செய்ததாகவும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.