தொகுதிகள் மறுசீரமைப்பு மூலம் தமிழகத்தின் உரிமையை மறுப்பதா? – முத்தரசன் கண்டனம் | Mutharasan Talkson delimitation of constituencies 

1352133.jpg
Spread the love

சென்னை: “தொகுதிகள் மறுசீரமைப்பு மூலம் தமிழகத்தின் உரிமையை மறுப்பதா? ஒன்றுபட்டு போராடுவோம். அரசின் அழைப்பை ஏற்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி அனைத்துக் கட்சி கூட்டத்தில் பங்கேற்கும்.” என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: ஒன்றிய அரசு நாடாளுமன்றத் தொகுதிகள் சீரமைப்பு மூலம் தமிழ்நாட்டின் 8 தொகுதிகளை வெட்டிக் குறைக்கும் என அதிர்ச்சியளிக்கும் செய்தி வெளியாகியுள்ளது. மக்கள் தொகையை கட்டுப்படுத்த வேண்டும் என்ற கொள்கையை ஏற்று தமிழ்நாடு வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ளது. இதனையொட்டி பல துறைகளிலும் முன்னேறி முதன்மை இடத்தை வகித்து வருகிறது. கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக, பாஜக பகீரத முயற்சிகளை மேற்கொண்டும் அரசியல் தளத்தில் வெற்றி பெற முடியவில்லை.

இதனால் சட்டப்படி தமிழகத்துக்கு ஒதுக்க வேண்டிய நிதியை ஒதுக்காமல் வஞ்சித்து வருகிறது. பள்ளிக் கல்வியில் இந்தி மொழியை பலவந்தமாக திணித்து, தமிழ் மொழிக்கு கேடு செய்யும் நிபந்தனைகளை விதித்து, அமைதி நிலையை சீர்குலைத்து வருகின்றது. இந்தச் சூழலில், நாடாளுமன்றத் தொகுதிகள் மறுசீரமைப்பு மூலம் தமிழ்நாட்டின் 8 தொகுதிகளை வெட்டி எடுத்து 31 தொகுதிகளாக குறைத்து விடும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது.

ஒன்றிய அரசின் ஜனநாயக விரோதச் செயலை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாக கண்டிப்பதுடன் இது தொடர்பாக வரும் 5 ஆம் தேதி அனைத்துக் கட்சி கூட்டம் நடத்த தமிழ்நாடு அரசு ஏற்பாடு செய்து, பதிவு செய்துள்ள அனைத்துக் கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்திருப்பதை வரவேற்கிறது.

நாடாளுமன்றத்தில் தமிழ்நாட்டின் குரல் ஒலிக்காமல் தடுக்கும் ஒன்றிய அரசின் மக்கள் விரோத, ஜனநாயக விரோதச் செயலை தடுத்து நிறுத்த, அனைத்து அரசியல் கட்சிகளும் ஒரு முகமாக எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என்ற அரசியல் உறுதியோடு அனைவரும் பங்கேற்க வேண்டும் என கேட்டுக் கொள்வதுடன், அரசின் அழைப்பை ஏற்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி அனைத்துக் கட்சி கூட்டத்தில் பங்கேற்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *