நாமக்கல்: மக்களவை தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக அதிகாரபூர்வமான அறிவிப்பு எதுவும் வராத நிலையில் திமுக கற்பனை செய்து கொண்டு, போராட்டங்களை நடத்தி வருகிறது என தமாகா தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்தார்.
நாமக்கல்லில் தமாகா கொங்கு மண்டல நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பங்கேற்ற கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது: 2026ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் தமாகா வெற்றி பெறவேண்டும் என்ற உறுதியோடு வியூகத்தின் அடிப்படையிலான பணிகளை தொடங்கியுள்ளோம்.
வரும் ஏப்ரல் மாதம் முதல் மண்டல ரீதியாக மக்கள் விரோத திமுக ஆட்சியை கண்டித்து, தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். தமிழகத்தில் திமுக அரசு தொடர்ந்து பல்வேறு பிரச்னைகளுக்கு தீர்வு காண முடியாத அரசாக செயலற்ற அரசாக நடைபெற்று வருகிறது.
கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் அளித்த வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்றவில்லை. 2026 சட்டப்பேரவை தேர்தலை கணக்கில் வைத்துக்கொண்டு, புதிது புதிதாக தேவையற்ற பிரச்னைகளை எழுப்பி மத்திய அரசோடு தமிழக அரசு மோதல் போக்கை கடைபிடிக்கிறது.
திமுகவின் 4 ஆண்டுகால ஆட்சியில் பொதுமக்கள் ஆளும் திமுக மீது கடுமையான அதிருப்தியில் உள்ளனர். திமுகவுக்கு எதிரான எதிர்மறை வாக்குகள் அதிகரித்துக் கொண்டே போகிறது என்பதுதான் உண்மை நிலை. புதிய தேசிய கல்விக்கொள்கை பல்வேறு அறிஞர்களின் ஆலோசனைப்பட்டி மத்திய அரசு உவாக்கியுள்ளது. இதை தமிழக அரசு ஏற்க மறுக்கிறது.
சர்வதேச அளவில் திறனை வளர்த்துக்கொள்ள மாணவர்கள் 3 மொழி படிக்க வேண்டும். ஆனால், தமிழக அரசு கூடாது என்கிறது. மும்மொழிக்கு பதிலாக, மூன்று வேலையும் சாராயம் குடிப்பதற்காக தமிழகத்தில் அரசு சார்பில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டுள்ளன. தாய் மொழியை படித்துக் கொண்டு, தொடர்பு மொழி ஆங்கிலம் இருந்த போதும், மூன்றாவதாக ஒரு மொழியை அவரவர் விருப்பப்படி கற்றுக் கொள்ளலாம் என்று தான் தேசியக் கல்விக் கொள்கை கூறுகிறது. இதை தமிழக அரசு எதிர்த்து வருகிறது.
இதனால் அரசுப் பள்ளிகளில் படிக்கும் ஏழை மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். மக்களவை தொகுதி மறு சீரமைப்பு என்பது எதிர்கால வளர்ச்சியை கருத்தில் கொண்டு செய்யப்படுகிறது. இதுவரை அதிகாரபூர்வமான அறிவிப்பு எதுவும் வராத நிலையில் திமுக கற்பனை செய்து கொண்டு, போராட்டங்களை நடத்தி வருகிறது.
வரும் 2026 சட்டப்பேரவை தேர்தலில் தமிழகத்தில் உள்ள எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஓர் அணியில் இணைந்து வெற்றிக்கூட்டணியை உருவாக்க தமாகா பாடுபடும். நிச்சயமாக சட்டப்பேரவை தேர்தலில் வெற்றிக்கூட்டணி வெற்றிபெற்று ஆட்சி அமைக்கும். அதில் தமாகா எம்எல்ஏக்கள் சட்டப்பேரவைக்கு செல்வர் என்றார்.
நாமக்கல் கிழக்கு மாவட்ட தமாகா தலைவர் இளங்கோவன், மாநில இளைஞரணி நிர்வாகி யுவராஜ், முன்னாள் எம்எல்ஏ., விடியல் சேகர் உள்ளிட்ட திரளான நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.