‘தொகுதி மறுவரையறையை நியாயமாக நடத்த வலியுறுத்துகிறோம்’ – முதல்வர் மு.க.ஸ்டாலின் | We are not against delimitation, we are demanding a fair delimitation: Stalin

1355263.jpg
Spread the love

சென்னை: ‘தொகுதி மறுவரையறையை தமிழகம் எதிர்க்கவில்லை. அதனை நியாயமாக நடத்தவே வலியுறுத்துகிறது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்றுள்ள தலைவர்கள் அதற்கான பரிந்துரைகளை முன்வைக்க வேண்டுகிறேன்’ என்று தொகுதி மறுவரையறை தொடர்பான கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டத்தில் ஆற்றிய வரவேற்புரையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு தெரிவித்து நடந்த அனைத்துக் கட்சிக் கூட்ட தீர்மானத்தின்படி, ‘கூட்டு நடவடிக்கைக் குழு’ அமைத்து தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்வது தொடர்பாக சென்னையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருறுகிறது.

இந்தக் கூட்டத்தில் பங்கேற்றுள்ள மாநில முதல்வர்கள், பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களையும் முதல்வர் ஸ்டாலின் வரவேற்றுப் பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது: தொகுதி மறுவரையறையை தமிழகம் எதிர்க்கவில்லை. அதனை நியாயமாக நடத்தவே வலியுறுத்துகிறது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்றுள்ள தலைவர்கள் அதற்கான பரிந்துரைகளை முன்வைக்க வேண்டுகிறேன். மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுவரையறை என்பதை ஏற்க முடியாது. அவ்வாறு நடந்தால் தமிழகம் 8 முதல் 12 இடங்களை இழக்கும். எண்ணிக்கை தான் அதிகாரம். ஒருவேளை நமக்கான தொகுதிகளை நாம் இழந்தால் சொந்த நாட்டிலேயே அதிகாரமற்றவர்களாக இருக்க நேரிடும்.

பல்வேறு மொழிகள், பண்பாடுகள், உடைகள், வழிபாட்டு நம்பிக்கைகள் உள்ளிட்டவை கொண்டதுதான் இந்தியா. அப்படியிருக்க மாநிலங்கள் சுயாட்சி தன்மையுடன் செயல்பட்டால்தான் இந்தியாவின் உண்மையான கூட்டாட்சி உருவாகும். மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுவரையறை மூலம் கூட்டாட்சி அமைப்புக்கு சோதனை வந்துள்ளது.

மேலும், மக்கள் தொகை அடிப்படையிலான தொகுதி மறுவரையறை என்பது தென் மாநிலங்களை கடுமையாக பாதிக்கும். காலம் காலமாக பாதுகாக்கப்படும் நமது சமூக நீதி பாதிக்கப்படும். அதனைத் தடுக்க இந்திய ஜனநாயகத்தை காக்க நாம் இங்கு ஒன்று கூடியுள்ளோம்.

இவ்விவகாரத்தில், உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் விளக்கம் தெளிவாக இல்லை. குழப்பத்தை ஏற்படுத்துவதாக இருக்கிறது அதனாலேயே முன் எப்போதும் இல்லாத ஒற்றுமையுடன் தமிழகம் ஒன்றிணைந்துள்ளது. இதே ஒற்றுமையுடன் இந்த அரங்கில் கூடியுள்ள அனைவரும் செயல்பட வேண்டும். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

‘அபாயத்தில் இருக்கிறோம்’ – தொடர்ந்து பேசிய துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், “இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றுள்ள மாநிலங்கள் மக்கள் தொகை பெருக்கத்தைக் கட்டுப்படுத்துவதில் குறிப்பிடத்தக்க முயற்சிகளை எடுத்துள்ளன. ஆனால் அந்த சாதனைக்காக கவுரவிக்கப்படாமல், அந்த மாநிலங்கள் தங்களின் பிரதிநிதித்துவத்தை இழக்கும் அபாயத்தில் உள்ளன.

பல பத்தாண்டுகளாகவே நாம் மக்கள் தொகையை கட்டுப்படுத்துவதில் பல்வேறு கொள்கைகளை வகுத்து, அதை செயல்படுத்த போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தி உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம். தேசம் நிலையான மக்கள் தொகை பெருக்கத்தை இலக்காகக் கொண்ட போது அதற்கேற்ப நாம் மாநிலங்களில் மக்கள் தொகையை கட்டுக்குள் வைத்தோம். இன்னும் சில மாநிலங்களில் மக்கள் தொகை பெருக்கம் அதிகமாக உள்ளது. ஆனால் அதைக் கட்டுப்படுத்தி ஒரு சாதனையை நாம் செய்துள்ளோம். அதற்காக இப்போது அரசியல் பிரதிநிதித்துவத்தை இழக்கும் சூழலில் உள்ளோம்.” என்று பேசினார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *