தொகுப்பூதிய முரண்பாடுகளை களைய உத்தரவிட தமிழக முதல்வருக்கு வேண்டுகோள் | Anna Accountants Association Demand CM Stalin to Resolve Salary Discrepancies

Spread the love

சென்னை: ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி திட்டத்தில் பணியாற்றி வரும் தொகுப்பூதிய பணியாளர்கள் இடையே நிலவும் ஊதிய முரண்பாடுகளை களைய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்று தமிழக முதல்வருக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அண்ணா கணக்காளர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் இல.பிரபு வெளியிட்டுள்ள அறிக்கையில், ”ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி திட்டத்தில் மாநில இயக்ககம் முதல் மாவட்ட, வட்டார அளவிலான அலுவலகங்களில் கணக்காளர்கள், கணினி விவர பதிவாளர்கள், கணினி வகைப்படுத்துநர்கள், கணினி நிரல் தொகுப்பாளர்கள், கட்டிட பொறியாளர்கள் என 1,428 பேர் தொகுப்பூதிய பணியாளர்களாக பணியாற்றி வருகின்றனர். அவர்களில் பெரும்பாலானோர் பெண்கள்.

அனைத்து அரசு துறைகளிலும் பணிபுரியும் தொகுப்பூதிய பணியாளர்கள் இடையே எந்தவிதமான ஊதிய முரண்பாடுகளும் இல்லை. ஆனால், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி இயக்ககத்தில் மட்டும் தொகுப்பூதிய பணியாளர்கள் இடையே ஊதிய முரண்பாடுகள் நிலவுகின்றன. ஒரே பணி நிலையில், ஒரே கல்வித் தகுதியில் பணிபுரிவோர் வெவ்வேறு தொகுப்பூதியம் பெற்று வருகின்றனர்.

இந்த முரண்பாடுகளை சரிசெய்ய நடவடிக்கை எடுக்குமாறு மாநில திட்ட இயக்குநருக்கு கடந்த 3 ஆண்டுகளாக கோரிக்கை விடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதேபோல், முதல்வரின் தனிப்பிரிவு, துணை முதல்வர், பள்ளிக் கல்வி அமைச்சர், பள்ளிக் கல்வித் துறை செயலர் என அனைவருக்கும் கோரிக்கை மனு அனுப்பியும் தொகுப்பூதிய முரண்பாடுகள் இன்று வரை களையப்படவில்லை.

எனவே, இந்த விஷயத்தில் தமிழக முதல்வர் தலையிட்டு தொகுப்பூதிய பணியாளர்களிடையே நிலவி வரும் தொகுப்பூதிய முரண்பாடுகளை களைந்து அவர்களுக்கு உயர்ந்தபட்ச ஊதியம் நிர்ணயித்து வழங்க உத்தரவிடுமாறு வேண்டுகோள் விடுக்கிறோம்” என்று அவர் கூறியுள்ளார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *