தொடங்கி விட்டீர்கள், ஆனால் முடிவு உங்கள் கையில் இல்லை: பதிலடியை தொடங்கிய ஈரான்  – Kumudam

Spread the love

ஈரான் தலைநகர் தெஹ்ரான் உள்ளிட்ட இடங்களில் அமெரிக்க – இஸ்ரேல் ராணுவம் வான்வழி தாக்குதல் நடத்தியுள்ளது. ஈரான் அருகே அமெரிக்கா படைகளை குவித்து வந்த நிலையில் தாக்குதல் தொடங்கப்பட்டுள்ளது. அமெரிக்காவுடன் அணுஆயுதம் ஒப்பந்தம் தொடர்பாக ஈரான் பேச்சு நடத்தி வரும் நிலையில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. 

இஸ்ரேல் தாக்குதலை அடுத்து பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல ஈரான் அரசு வலியுறுத்தியுள்ளது. தங்கள் நாட்டின் உச்ச தலைவரும், அதிபரும் பாதுகாப்பாக உள்ளதாக ஈரான் அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், தாக்குதலை தொடங்கி வைத்து விட்டீர்கள்; இனி முடிவு உங்கள் கையில் இல்லை என கூறப்பட்டுள்ளது.

இஸ்ரேல் முக்கிய நகரங்களை குறிவைத்து ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது. 70 ஏவுகணைகள் வரை இஸ்ரேல் நகரங்கள் மீது ஏவப்பட்டுள்ளதாக ஈரான் அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். ஈரான் பதில் தாக்குதலுக்கு தயாராவதால் இஸ்ரேல் தனது வான்வெளியை மூடியது. ஈரானில் உள்ள இந்தியர்கள் வீட்டிலிருந்து வெளியே வருவதை தவிர்க்க இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.

இஸ்ரேல் மீது ஈரான் பதில் தாக்குதலை துவங்கியுள்ளது. ஒரே நேரத்தில் 35 முதல் 70 ஏவுகணைகளை இஸ்ரேல் மீது ஏவிய நிலையில், இஸ்ரேலின் வான்வெளி பாதுகாப்பு அமைப்பானது அதனை தடுத்து வருகிறது. போர் பதற்றத்தை தொடர்ந்து இஸ்ரேல் முழுவதும் எச்சரிக்கை சைரன்கள் தொடர்ந்து ஒலிக்கின்றன. இரு நாடுகளிலும் மக்கள் வீட்டை விட்டு வெளியேற வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

மேலும் பஹ்ரைன் உள்ள அமெரிக்கா நிலைகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தி உள்ளது. கத்தாரும் மக்கள் யாரும் வெளியே வர வேண்டாம் என எச்சரித்துள்ளது.  ஈரான் – இஸ்ரேல் இடையேயான போர் பதற்றத்தால் இஸ்ரேலில் உள்ள இந்தியர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் உதவிக்கான மின்னஞ்சல், தொலைபேசி எண்களையும் இந்திய தூதரகம் வெளியிட்டுள்ளது. குறிப்பாக, இஸ்ரேல் விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ள நிலையில், இஸ்ரேல், ஈரான் ஆகிய நாடுகளுக்கு பயணம் மேற்கொள்வதை தவிர்க்க இந்தியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *