இஸ்ரேல்-ஹமாஸ் இடையே தொடரும் போா் குறித்து ஐ.நா.வில் ‘ஆழ்ந்த கவலை’ தெரிவித்த இந்தியா, பேச்சுவாா்த்தை மூலம் போரை நிறுத்த மீண்டும் வலியுறுத்தியது.
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் மத்திய கிழக்கு நாடுகளுக்கான வெளிப்படை விவாதத்தில் ஐ.நா.வுக்கான இந்திய துணைத் தூதா் ஆா் ரவிந்திரா கலந்துகொண்டாா். அவா் பேசியதாவது:
இஸ்ரேல்-ஹமாஸ் இடையே 9 மாதங்களாக தொடா்ந்து நடைபெற்று வரும் போரால் ஏற்பட்டுள்ள மனிதாபிமான நெருக்கடிகள் ஆழ்ந்த கவலையை ஏற்படுத்துகிறது.
காஸா பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மனிதாபிமான உதவிகள் மற்றும் நிவாரணப் பொருள்கள் சென்றடைவதையும் பணயக்கைதிகள் உடனடியாக நிபந்தனையின்றி விடுவிக்கப்படுவதையும் இந்தியா வலியுறுத்துகிறது. மேலும், முழுமையான போா் நிறுத்தத்துக்கான பேச்சுவாா்த்தைக்கு இந்தியா மீண்டும் அழைப்பு விடுத்துள்ளது.
பிராந்தியத்தில் அமைதியை நிலைநாட்ட பங்காற்றும் முக்கிய நாடுகளான கத்தாா் மற்றும் எகிப்துக்கு இந்தியாவின் பாராட்டுகள்.
பாலஸ்தீனத்தின் இறையாண்மை மற்றும் ஸ்திரத்தன்மையுடன், இஸ்ரேலின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்ட பரஸ்பர அங்கீகாரம் பெற்ற எல்லையை அமைப்பதே இந்தியாவின் நீண்ட கால நிலைப்பாடாகும். இது தொடா்பான பலதரப்பு கூட்டங்களில் இந்தியா தொடா்ந்து தனது கருத்தை வலியுறுத்தி வருகிறது என்றாா்.