கோவை: மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் பருவமழை காரணமாக நீர்வரத்து அதிகரித்துள்ளதால், பில்லூர் அணையில் நீர்மின் உற்பத்திப் பணிகள் தீவிரமடைந்துள்ளது.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே, பில்லூர் வனப்பகுதியில், மேற்குத் தொடர்ச்சி மலைக்காடுகளை நீர்ப்பிடிப்புப் பகுதிகளாக கொண்டு, கடந்த 1967ம் ஆண்டு பில்லூர் அணை கட்டப்பட்டது. பில்லூர் அணையின் மொத்த நீர்தேக்க உயரம் 100 அடி ஆகும். பில்லூர் அணை மற்றும் அதை ஒட்டியுள்ள பவானி ஆறு ஆகியவற்றை மையப்படுத்தி கோவை, திருப்பூர் மாவட்டங்களுக்கு தேவையான 10-க்கும் மேற்பட்ட குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
பில்லூர் அணையில் நீர்மட்டம் 97 அடியை கடந்தால், நிரம்பியதாக கருதி, உபரி நீர் 4 மதகுகள் வழியாக பவானி ஆற்றில் தண்ணீர் வெளியேற்றப்படும். அதேபோல், பில்லூர் அணையில் இருந்து நீர் மின் உற்பத்திக்காக தொடர்ச்சியாக விநாடிக்கு 3 ஆயிரம் முதல் 6 ஆயிரம் கனஅடி தண்ணீர் வரை தினமும் திறந்து விடப்படுகிறது. பில்லூர் அணையில் இருந்து தினசரி நூறு மெகா வாட் நீர்மின் உற்பத்தி செய்யப்படுகிறது.
இந்நிலையில், நடப்பாண்டு கோடை வெயிலின் தாக்கம் முன்கூட்டியே தொடங்கியதாலும், போதிய மழை இல்லாததாலும் அணையின் நீர்மட்டம் சரமாரியாக சரிந்தது. அணையிலிருந்து குடிநீர் திட்டங்களுக்கு தண்ணீர் எடுப்பதில் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதனால் மின் உற்பத்திக்கு தண்ணீர் விநியோக்கி முடியாமல், கடந்த பிப்ரவரி மாதம் இறுதி வாரத்தில் உற்பத்தி நிறுத்தப்பட்டது. தொடர்ந்து கடந்த மாத இறுதியில் அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த தொடர் மழை காரணமாக கடந்த மாதம் அணை நிரம்பியது.
அதன் பின்னர், சில நாட்கள் மழை இல்லை. பின்னர் மீண்டும் மழை தொடங்கியதால், அணையின் நீர்மட்டம் தொடர்ச்சியாக அதிகரித்த நிலையில் இருந்தது. கடந்த 16-ம் தேதி முதல் தொடர்ச்சியாக 5 நாட்களுக்கு உபரி தண்ணீர் பவானி ஆற்றில் திறந்து விடப்பட்டது. நீர் வரத்து அதிகரித்ததால் அணை நீரை பயன்படுத்தி நீர்மின் உற்பத்திக்கும் வழக்கம் போல் தண்ணீர் விநியோகிக்கப்பட்டது. இதையடுத்து நீர் மின் உற்பதிப் பணிகள் மீண்டும் தீவிரமடைந்துள்ளது. விநாடிக்கு 3 ஆயிரம் கனஅடி முதல் 6 ஆயிரம் கன அடி வரை நீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் தரப்பில் கூறும்போது,‘‘ நீரின் வேகத்தை பயன்படுத்தி தினமும் 100 மெகா வாட் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இன்று முதல் அணைக்கான நீர்வரத்து குறைந்தாலும், மின்உற்பத்திக்கு வழக்கம் போல் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது’’என்றனர்.