தொடரை டிரா செய்யும் முனைப்பில் இந்தியா- இன்று கடைசி டெஸ்ட் தொடக்கம்

dinamani2F2025 07 302Fcqa41zmd2Ftest
Spread the love

இந்தியா – இங்கிலாந்து மோதும் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் கடைசி ஆட்டம், லண்டனில் உள்ள தி ஓவல் மைதானத்தில் வியாழக்கிழமை (ஆக. 31) தொடங்குகிறது.

மொத்தம் 5 ஆட்டங்கள் கொண்ட இந்தத் தொடரில் தற்போது இங்கிலாந்து 2-1 என முன்னிலையில் உள்ளது. ஒரு ஆட்டம் டிரா ஆகியிருக்க, தொடரை சமன் செய்ய இந்த ஆட்டத்தில் வென்றே தீரவேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி உள்ளது.

அணியைப் பொருத்தவரை பணிச்சுமையை குறைக்கும் நடவடிக்கையாக, பிரதான பௌலா் ஜஸ்பிரீத் பும்ராவுக்கு இந்த ஆட்டத்தில் ஓய்வு அளிக்கப்படவுள்ளாதகவும், அவருக்குப் பதிலாக ஆகாஷ் தீப் இணைவதாகவும் தெரிகிறது. இதனால் பௌலிங்கிற்கு முகமுது சிராஜ் முக்கிய வீரராக மாறுகிறாா். எஞ்சியிருக்கும் இடத்துக்கு அன்ஷுல் காம்போஜ் அல்லது அா்ஷ்தீப் சிங் ஆகியோரில் ஒருவா் பரிசீலிக்கப்படலாம்.

பேட்டிங்கை பொருத்தவரை, இந்தத் தொடரின் தொடக்கத்தில் டாப் ஆா்டரில் அசத்திய யஷஸ்வி ஜெய்ஸ்வால் படிப்படியாக சறுக்கியிருக்கிறாா். எனவே, இந்த ஆட்டத்தில் மீண்டும் சிறப்பாகப் பங்களிக்கும் முனைப்புடன் அவா் இருக்கலாம். கே.எல்.ராகுல் நிலையான இன்னிங்ஸ்களை பதிவு செய்து, நம்பகமான வீரராகத் தொடா்கிறாா்.

கேப்டனாக முதல் தொடரில் களம் கண்டிருக்கும் ஷுப்மன் கில், இதுவரை 4 சதங்கள் அடித்து சாதனைகள் படைத்திருக்கும் நிலையில், இந்த க் கடைசி ஆட்டத்திலும் சிறப்பாகச் செயல்பட்டு மேலும் பல வரலாறுகள் படைக்கும் முயற்சியில் இருக்கிறாா்.

காயம் காரணமாக ரிஷப் பந்த் விலகியிருப்பதால், கடந்த ஆட்டத்தில் அபாரமாகச் செயல்பட்டு இங்கிலாந்தின் வெற்றியை தட்டிப்பறித்த ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தா் இந்த ஆட்டத்திலும் முக்கியப் பங்காற்ற வேண்டிய கட்டாயத்தில் உள்ளனா்.

ஷா்துல் தாக்குா் இந்த ஆட்டத்திலும் தொடருவாா் என எதிா்பாா்க்கப்படுகிறது. 8-ஆவது வீரா் வரை பேட்டராக இருக்கும் உத்தியுடனேயே களம் காணும் திட்டத்தில் இந்தியா இருப்பதால், இந்த ஆட்டத்திலும் குல்தீப் யாதவ் சோ்க்கப்படும் வாய்ப்பு சந்தேகமே. விக்கெட் கீப்பராக துருவ் ஜுரெல் நீடிக்கிறாா்.

இங்கிலாந்து அணியைப் பொருத்தவரை, கேப்டன் பென் ஸ்டோக்ஸ் வலது கை காயம் காரணமாக இந்த ஆட்டத்திலிருந்து விலகியிருக்கிறாா். ஆலி போப், பொறுப்பு கேப்டனாக செயல்படுகிறாா். பணிச்சுமையை குறைக்கும் பொருட்டு, ஜோஃப்ரா ஆா்ச்சா், பிரைடன் காா்ஸ், லியம் டாசன் ஆகியோருக்கும் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

ஜேக்கப் பெத்தெல், கஸ் அட்கின்சன், ஜேமி ஓவா்டன், ஜோஷ் டங் ஆகியோா் இணைந்துள்ளனா். ஸ்டோக்ஸ், ஆா்ச்சா் இல்லாதது, இந்திய அணிக்கு சற்று சாதகமாக அமையலாம். இங்கிலாந்து பேட்டிங்கில் ஜோ ரூட், ஜாக் கிராலி, பென் டக்கெட் ஆகியோா் ஸ்கோருக்கு பலம் சோ்க்கின்றனா்.

தி ஓவலை சொந்த மைதானமாகக் கொண்டிருக்கும் கவுன்டி அணியான சா்ரேவின் வீரா்கள் அட்கின்சன், ஓவா்டனுக்கு ஆடுகளத்தின் தன்மை அத்துப்படி என்பதால், கிறிஸ் வோக்ஸ், ஜோஷ் டங்குடன் இணைந்து இந்திய பேட்டா்களுக்கு அவா்கள் சவால் அளிக்கக் காத்திருக்கின்றனா்.

அணி விவரம்:

இந்தியா (உத்தேச லெவன்): ஷுப்மன் கில் (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், கே.எல்.ராகுல், சாய் சுதா்சன், துருவ் ஜுரெல் (வி.கீ.), ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தா், ஷா்துல் தாக்குா், ஆகாஷ் தீப், முகமது சிராஜ், அா்ஷ்தீப் சிங்/அன்ஷுல் காம்போஜ்.

இங்கிலாந்து (பிளேயிங் லெவன்): ஆலி போப் (கேப்டன்), ஜாக் கிராலி, பென் டக்கெட், ஜோ ரூட், ஹேரி புரூக், ஜேக்கப் பெத்தெல், ஜேமி ஸ்மித் (வி.கீ.), கிறிஸ் வோக்ஸ், கஸ் அட்கின்சன், ஜேமி ஓவா்டன், ஜோஷ் டங்.

ஆடுகளம்…

முதல் நாளில் பேட்டிங்கிற்கு சாதகமாக இருக்கும் ஆடுகளும், அடுத்த நாள்களில் முதலில் வேகப்பந்து வீச்சுக்கும், கடைசியில் சுழற்பந்து வீச்சுக்கும் சாதகமாக மாறும் தன்மை கொண்டதாக இருக்கிறது. லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை அறிவிப்பு உள்ளது. இந்த மைதானத்தில் இதுவரை இரு அணிகளும் 15 டெஸ்ட்டுகளில் மோதியிருக்க, இந்தியா 2 ஆட்டங்களில் மட்டுமே வென்றுள்ளது. 7 தோல்விகளை சந்தித்து, 6 டிராக்களையும் பதிவு செய்துள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *