பள்ளிக்கரணை: சிறுவர் பூங்கா, நடைபாதை, மின்விளக்கு, இருக்கைகள், சிசிடிவி, கேமரா உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் சென்னை பள்ளிக்கரணை அணை ஏரியை சென்னை மாநகராட்சி சீரமைக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது. சென்னை மாநகராட்சி எல்லையில் உள்ள பள்ளிக்கரணை அணை ஏரி சுமார், 50 ஏக்கரில் அமைந்துள்ளது.
இந்த பகுதி மக்களுக்கு நிலத்தடி நீர் ஆதாரமாகவும் இந்த ஏரி உள்ளது. இந்நிலையில், முறையாக பராமரிக்கப்படாத காரணத்தால் ஆக்கிரமிப்புகள் அதிகரித்து, ஏரியின் பரப்பளவு படிப்படியாக குறைந்து வருகிறது. மேலும், குப்பை கழிவுகளுடன் கழிவு நீரும் கலப்பதால், ஏரி நீர் மாசடைந்து வருகிறது. எனவே, இந்த ஏரியை தூர்வாரி சீரமைக்க வேண்டும்.
மேலும், ஏரிக்கரையை சுற்றிலும் நடைபயிற்சி மேற்கொள்ள நடைபாதையும், சிறுவர் பூங்காவும் அமைக்க வேண்டுமென, பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இதற்கு முன்பு, கடந்த 2020-ம் ஆண்டு ரூ.10 கோடியில் ஏரியை சீரமைக்கும் பணிகள் தொடங்கியும் முழுமையாக நடைபெறமால் கிடப்பில் போடப்பட்டது. சென்னை மாநகராட்சி, இந்த ஏரியை மழைநீர் சேகரிப்பு மையமாக மாற்ற வேண்டுமென, அப்பகுதி மக்களும், சமூக ஆர்வலர்களும் தொடந்து கோரிக்கை வைத்து வருகின்றனர்.
இதுகுறித்து, சமூக ஆர்வலர் பிரிட்டோ கூறியதாவது: பள்ளிக்கரணை அணை ஏரி பல ஆண்டுகளாக பராமரிக்கப்படாமல் உள்ளதால் மழைநீரை சேமிக்க முடியாத நிலையில், தரைமட்டத்திலேயே அதன் கொள்ளளவு காணப்படுகிறது. ஏரியின் அருகே கழிவுநீரை சுத்திகரிக்க, சுத்திகரிப்பு நிலையம் அமைக்க வேண்டுமென, தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகிறோம்.
இது குறித்து தலைமைச் செயலாளரிடம் கோரிக்கை மனு அளித்தபோது 3 மாதத்துக்குள் நிறைவேற்றப்படும் என உறுதி அளித்தார். அதனைத் தொடர்ந்து சென்னை மாநகராட்சி இணை ஆணையர் நேரில் ஆய்வு செய்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.