தொடர் ஆய்வுக் கூட்டம், பயிற்சி பாசறை: கட்சியின் உட்கட்டமைப்பை வலுப்படுத்த மதிமுக தீவிரம் | mdmk is keen to strengthen the party infrastructure

1349406.jpg
Spread the love

சென்னை: மாவட்ட வாரியாக தொடர் ஆய்வுக் கூட்டம், அணிகளின் பயிற்சி பாசறை போன்றவற்றை நடத்தி கட்சியின் உட்கட்டமைப்பை வலுப்படுத்தும் முயற்சியில் மதிமுக தலைமை தீவிரம் காட்டி வருகிறது.

இது தொடர்பாக கட்சியின் மூத்த நிர்வாகி ஒருவர் கூறியதாவது: மதிமுகவில் அமைப்பு ரீதியாக புதுச்சேரி, காரைக்காலையும் சேர்த்து 69 மாவட்டங்கள் உள்ளன. இவற்றை பேரூர், ஒன்றியம், கிளை அளவில் வலுப்படுத்துமாறு தலைமை உத்தரவிட்டுள்ளது. குறிப்பாக கடந்த சட்டப்பேரவை, நாடாளுமன்ற தேர்தலில் மதிமுக வென்ற தொகுதிகளில் கட்சியை வலுவாக வைத்திருக்கவும் தலைமை கடுமையான அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.

அந்த வகையில் தொடர் கள ஆய்வுகளை தலைமை நிர்வாகிகள் மேற்கொண்டு வருகின்றனர். முதல்கட்டமாக விருதுநகர் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் ஆய்வுக்கூட்டங்கள் நடத்தப்பட்டன. இதில் அவைத் தலைவர் ஆடிட்டர் அர்ஜுனராஜ், பொருளாளர் மு.செந்திலதிபன் பங்கேற்று நிர்வாகிகளின் கருத்துக்களைக் கேட்டறிந்தனர்.

அப்போது, உள்ளாட்சித் தேர்தலில் கணிசமான இடங்களில் போட்டியிட வேண்டும் என நிர்வாகிகள் தெரிவித்திருந்தனர். இதன் தொடர்ச்சியாக இரண்டாம் கட்டமாக மாவட்ட அளவிலான கலந்தாய்வு கூட்டம் தொடர்பான அறிவிப்பை கட்சியின் பொதுச்செயலாளர் வெளியிட்டுள்ளார்.

கலந்தாய்வு கூட்டம்: அதன்படி, நாளை முதல் பிப்.7-ம் தேதி வரை வேலூர், செங்கல்பட்டு, திருவாரூர் ஆகிய இடங்களில் கலந்தாய்வு கூட்டம் நடைபெறவிருக்கிறது. 6 மாவட்டங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் பங்கேற்கும் கூட்டங்களுக்கு, அரசியல் ஆலோசனைக் குழு உறுப்பினர் அ. நாசீர்கான், துணை பொதுச்செயலாளர்கள் மல்லை சி.ஏ.சத்யா, ஆடுதுறை இரா.முருகன் ஆகியோர் தலைமை வகிக்கின்றனர். தலைமையின் அறிவுறுத்தல்படி, அரசியல் ஆய்வு மைய செயலாளர் ஆவடி இரா.அந்திரிதாஸ், கொள்கை விளக்க அணிச் செயலாளர் ஆ.வந்தியத்தேவன் ஆகியோர் பங்கேற்கின்றனர்.

இதைத் தொடர்ந்து நாடாளுமன்ற கூட்டத் தொடர் முடிவடைந்த பின்னர் தமிழகம் முழுவதும் 6 மண்டலங்களில் செயல்வீரர்கள் கூட்டம் நடத்த திட்டமிட்டுள்ளோம். இதில் கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ, முதன்மைச் செயலாளர் துரை வைகோ, தலைமை நிர்வாகிகள் பங்கேற்கின்றனர்.

அதன் பின்னர் பொதுக்குழு, மாநாடு போன்றவை நடைபெறும். இதுமட்டுமின்றி, மார்ச் மாதம் முதல் மண்டல அளவில் சார்பு அணிகளுக்கான பயிற்சி பாசறை நடத்த இருக்கிறோம். மண்டல வாரியாக 200 பேர் பங்கேற்க உள்ள பாசறை கூட்டத்தில், கருத்தரங்கம், பேச்சாளர் பயிற்சி முகாம் போன்றவற்றை ஏற்பாடு செய்யப்படவுள்ளது. இவ்வாறு இந்த ஆண்டு முழுமைக்குமான பணிகளை திட்டமிட்டு, செயல்படுத்துவதற்கான வேலைகளில் தீவிர கவனம் செலுத்தி வருகிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *