சென்னை: வங்கக் கடலில் உருவான ஃபென்ஜான் புயல் சனிக்கிழமை இரவு மரக்காணம், புதுச்சேரி இடையே கரை கடந்ததை அடுத்து தொடர்ந்து கனமழை பெய்து வரும் நிலையில், பல்கலைக்கழகத் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
வங்கக் கடலில் உருவான ஃபென்ஜான் புயல் சனிக்கிழமை இரவு 10.30 மணி முதல் 11.30 மணியளவில் மரக்காணம், புதுச்சேரி இடையே கரை கடந்தது. புயல் கரையை கடந்த போது காற்றின் வேகம் 50 முதல் 80 கி.மீட்டர் வேகத்திலும், சில நேரங்களில் 90 கி.மீட்டர் வேகத்திலும் வீசியது.
அதையடுத்து புதுச்சேரி பிராந்தியம், விழுப்புரம், கடலூர்,திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி,சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.
இதனைத் தொடர்ந்து, 12 மணி நேரமாக நகராமல் ஒரே இடத்தில் நிலைக்கொண்டிருந்த புயல், ஞாயிற்றுக்கிழமை காலை 11.30 மணியளவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்தது.
தற்போது கடலூருக்கு வடக்கே 30 கி.மீட்டர் தொலைவிலும், விழுப்புரத்திற்கு கிழக்கே 40 கி.மீட்டர் தொலைவிலும், சென்னைக்கு தெற்கு- தென்மேற்கே 120 கி.மீட்டர் தொலைவிலும் நிலைக்கொண்டுள்ளது. அது மேற்கு நோக்கி மிக மெதுவாக நகர்ந்து 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.