விழுப்புரம்: தொடர் கனமழையால் மரக்காணத்தில் பக்கிங்காம் கால்வாய் நீர் புகுந்ததால், 4 ஆயிரம் ஏக்கர் உப்பளங்கள் நீரில் மூழ்கின.
தமிழக பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதன் காரணமாக தமிழகத்தில் 17-ம் தேதி வரை பெரும்பாலான இடங்களில் மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.
அந்தவகையில் மரக்காணத்தில் ஞாயிற்றுக்கிழமை (ஆக.11) 10.5 செ.மீ, திங்கள்கிழமை காலை வரை 6.5 செ.மீ என கனமழை பெய்துள்ளது. இதனால் ஓங்கூர் ஆறு உள்ளிட்ட முக்கிய ஓடைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்த மழை நீர் பக்கிங்காம் கால்வாய் வழியாக உப்பளங்களில் புகுந்ததால் சுமார் 4 ஆயிரம் ஏக்கர் உப்பளங்கள் நீரில் மூழ்கி கடல் போல் காட்சியளிக்கின்றன.
உப்பளங்கள் நீரில் மூழ்கி விட்டதால் கரையோரம் இருந்த உப்புகளை அம்பாரமாக கொட்டி பாதுகாத்து வருகின்றனர். இதனால் உப்பு வடிக்கும் தொழிலை நம்பியுள்ள இப்பகுதியின் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர்.
இந்த ஆண்டு கோடைகாலம் தொடங்கி தற்பொழுது வரை இப்பகுதியில் பெய்த மழையின் காரணமாக உப்பு உற்பத்தி அடிக்கடி தடைபட்டது. இதனால் இப்பகுதியில் உள்ள உப்பு உற்பத்தியாளர்கள் பெரும் நஷ்டம் அடைந்துள்ளதாகவும், மழை நீர் வடிந்து மீண்டும் உப்பு உற்பத்தி அடுத்த ஆண்டு ஜனவரி அல்லது பிப்ரவரி மாதத்தில் தான் துவங்கும் எனவும் கூறுகின்றனர்.