19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று (சனிக்கிழமை) இரண்டு லீக் ஆட்டங்கள் நடக்கின்றன. இன்று இரவு சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் அரங்கேறும் 18-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, டெல்லி கேபிட்டல்சை எதிர்கொள்கிறது.5 முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, இந்த சீசனில் தனது முதல் 3 ஆட்டங்களில் ராஜஸ்தான், பஞ்சாப், பெங்களூரு அணிகளிடம் தோல்வி கண்டு புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.
‘ஹாட்ரிக்’ தோல்வி கண்டிருக்கும் சென்னை, இந்த சீசனில் தனது முதல் வெற்றியைப் பதிவு செய்யும் முனைப்புடன் இந்த ஆட்டத்துக்கு வருகிறது. மறுபுறம் டெல்லி, கடந்த ஆட்டத்தில் குஜராத்திடம் 1 ரன் வித்தியாசத்தில் தோற்ற கையோடு வந்துள்ளது.சென்னை அணியைப் பொருத்தவரை, பேட்டிங், பௌலிங் என இரண்டிலுமே சாதிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
சஞ்சு சாம்சன், கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் கூட்டணி, கடந்த 3 போட்டிகளில் சரியாக விளையாடவில்லை. எனவே, இந்த ஆட்டத்தில் நல்லதொரு தொடக்கத்தை பதிவு செய்ய வேண்டியதற்கான நெருக்கடி அவா்களுக்கு உள்ளது. காயத்திலிருந்து மீண்டுள்ள அதிரடி பேட்டா் டெவால்டு பிரெவிஸ், இந்த ஆட்டத்தில் இணைந்து சென்னைக்கு பலம் சோ்ப்பாா் என சென்னை ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி தனது முதல் இரு ஆட்டங்களில் லக்னோ, மும்பையை பந்தாடியது. குஜராத்துக்கு எதிரான முந்தைய ஆட்டத்தில் கடைசி 2 பந்துகளில் 2 ரன்கள் எடுக்க முடியாமல் ஒரு ரன் வித்தியாசத்தில் அதிர்ச்சிகரமாக தோற்றது. ஆனாலும் இதுவரை டெல்லி அணி தனது சிறப்பான ஆட்டத்தை இந்த சீசனில் வெளிப்படுத்தி வருவது சென்னை அணிக்கு பெரிய சவாலாக அமையும்.
முன்னதாக, இன்று மாலை 3.30 மணிக்கு நியூ சண்டிகாரில் நடக்கும் மற்றொரு ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ்- ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
