தொடர் தோல்வி; 3 ஆண்டுகளுக்கு பிறகு பிரசாந்த் கிஷோரை அழைத்து பேசிய பிரியங்கா காந்தி! | Prashant Kishor meets Priyanka Gandhi, 3 years after falling out with Congress

Spread the love

காங்கிரஸ் கட்சிக்கு தேர்தல்களில் தொடர்ந்து தோல்வி ஏற்பட்டுக்கொண்டிருக்கிறது. கடைசியாக நடந்த பீகார் சட்டமன்ற தேர்தலிலும் படுதோல்வியை சந்தித்துள்ளது. இத்தேர்தலில் அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் கட்சியும் போட்டியிட்டது. அந்த கட்சியும் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. ராகுல் காந்தி வாக்கு திருட்டு மற்றும் வாக்காளர் பட்டியல் திருத்தம் போன்ற பிரச்னைகளை மையப்படுத்தி போராட்டங்களை நடத்தி வருகிறார். ஆனாலும் இப்பிரச்னை பீகார் தேர்தலில் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. மற்றொரு புறம் காங்கிரஸ் கட்சியை பலவீனப்படுத்தும் வேலையை பா.ஜ.க முழுவேகத்தில் செய்து கொண்டிருக்கிறது.

தற்போது பிரசாந்த் கிஷோர், காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தியை சந்தித்து பேசி இருக்கிறார். இதற்கு முன்பு 2022ம் ஆண்டு காங்கிரஸ் கட்சிக்கு புத்துயிர் கொடுப்பது தொடர்பாக பிரசாந்த் கிஷோருடன் காங்கிரஸ் தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

பிரசாந்த் கிஷோர்

பிரசாந்த் கிஷோர்

ஆனால் அந்த பேச்சுவார்த்தை பாதியில் தோல்வியில் முடிந்துவிட்டது. இவ்விவகாரத்தில் சுதந்திரமாக செயல்பட தனக்கு அனுமதி கொடுக்கவேண்டும் என்று பிரசாந்த் கிஷோர் கேட்டார். அதோடு கட்சிக்கு புத்துயிர் கொடுக்கும் திட்டத்தை சோனியா காந்தியிடம் அவரது இல்லத்திற்கு சென்று பிரசாந்த் தாக்கல் செய்தார்.

இதில் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தியும் கலந்துகொண்டனர். பிரசாந்த் கிஷோரும் காங்கிரஸ் கட்சியில் சேருவதாக இருந்தது. இதையடுத்து பிரசாந்த் கிஷோரின் திட்டம் குறித்து ஆய்வு செய்ய சோனியா காந்தி தனி கமிட்டி ஒன்றை அமைத்தார். காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து அந்த கமிட்டியிலும் உறுப்பினராக சேரும்படி பிரசாந்த் கிஷோரை சோனியா காந்தி கேட்டுக்கொண்டார். ஆனால் காங்கிரஸ் கட்சியில் அடிமட்டத்தில் உள்ள பிரச்னையை சரி செய்ய சீர்திருத்தம் கொண்டு வரவேண்டியது அவசியம் என்று பிரசாந்த் கிஷோர் தெரிவித்தார்.

அதன் பிறகு அப்பேச்சுவார்த்தை அப்படியே நின்று போனது. பிரசாந்த் கிஷோரும் காங்கிரஸ் கட்சியில் சேரவில்லை. இவ்விவகாரத்தைத் தொடர்ந்து பிரசாந்த் கிஷோர் பீகாரில் சொந்த கட்சியை தொடங்கினார். பீகார் தேர்தலில் அவரது கட்சியைச் சேர்ந்த 99 சதவீத வேட்பாளர்கள் டெபாசிட்டை இழந்தனர். இதையடுத்து தனது அரசியல் எதிர்காலம் குறித்து பிரசாந்த் கிஷோர் மறு ஆய்வு செய்து வருகிறார். இந்நிலையில்தான் அவர் பிரியங்கா காந்தியை சந்தித்து முக்கிய ஆலோசனை செய்துள்ளார். இது அரசியல் ஆலோசனையா அல்லது வழக்கமான சந்திப்பா என்று தெரியவில்லை. ஆனால் பிரசாந்த் கிஷோர் மற்றும் காங்கிரஸ் என இரு தரப்பினருக்கும் மாற்றம் தேவையாக இருக்கிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *