தென்காசி: தென்காசி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. நேற்று பெரும்பாலான பகுதிகளில் வறண்ட வானிலை காணப்பட்டது. இன்று காலை வரை கடனாநதி அணைப் பகுதியில் மட்டும் 2 மி.மீ. மழை பதிவானது. இந்நிலையில், இன்று காலையில் இருந்து வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. ஆலங்குளம், பாவூர்சத்திரம், தென்காசி, இலத்தூர், சுரண்டை சுற்றுவட்டார பகுதிகளில் நீண்ட நேரமாக லேசான மழை தூறிக்கொண்டே இருந்தது.
காலை 9 மணி முதல் நீண்ட நேரமாக மழை தூறிக்கொண்டே இருந்ததால் விவசாய பணிகள், கட்டுமான பணிகள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் பாதிக்கப்பட்டன. பண்பொழி, மேக்கரை, சங்கரன்கோவில், வாசுதேவநல்லூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் லேசான மழை பெய்தது.
குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. ஆனால் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் மிகவும் குறைவாகவே இருந்தது. இந்நிலையில், தொடர்ந்து மழை தூறிக்கொண்டே இருந்ததால் குற்றாலம் அருவிகளில் நீர் வரத்து அதிகரித்தது. இதனால் குற்றாலம் பிரதான அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவி ஆகியவற்றில் குளிக்க தடை விதிக்கப்பட்டது.
கடனாநதி அணை நீர்மட்டம் 40.50 அடியாகவும், ராமநதி அணை நீர்மட்டம் 54.50 அடியாகவும், கருப்பாநதி அணை நீர்மட்டம் 48.39 அடியாகவும், அடவிநயினார் அணை நீர்மட்டம் 73 அடியாகவும் இருந்தது. குண்டாறு அணை தொடர்ந்து முழு கொள்ளளவில் உள்ளது.