சென்னை: சுதந்திர தினம், கிருஷ்ண ஜெயந்தி, ஞாயிறு விடுமுறை என தொடர்ந்து விடுமுறை வருவதால் சென்னையிலிருந்து அரசுப் பேருந்துகளில் சுமார் 3 லட்சம் பேர் சொந்த ஊர்களுக்கு பயணமாகினர். போக்குவரத்துத் துறை சார்பில் வார இறுதி நாள் மற்றும் சுதந்திர தின தொடர் விடுமுறையை முன்னிட்டு சிறப்புப் பேருந்துகள் இயக்கப் பட்டன.
அதன்படி, நேற்று அதிகாலை 3 மணி வரை வழக்க மாக இயக்கப்படும் 2,092 பேருந்துகளும் 1,160 சிறப்புப் பேருந்துகளும் என 3,252 பேருந்துகள் இயக்கப்பட்டன. இவற்றில், 1.78 லட்சம் பேர் பயணம் செய்தனர்.
முன்பதிவு எண்ணிக்கை சென்னை, கிளாம்பாக்கம், கோயம்பேடு, மாதவரம் ஆகிய பகுதிகளிலிருந்து நேற்றும் தேவைக்கேற்ப பேருந்துகள் இயக்கப்பட்டன. அந்த வகையில் கடந்த 2 நாட்களில் அரசுப் பேருந்துகள் வாயிலாக சுமார் 3 லட்சம் பேர் பயணமாகினர்.
இதேபோல், நாளைய தினம் ஊர் திரும்ப சென்னை, பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளுக்கு 715 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. முன்பதிவு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், பயணிகள் முன்னரே பயணச்சீட்டை முன்பதிவு செய்துகொள்ளுமாறு போக்குவரத்துத் துறை கேட்டுக் கொண்டுள்ளது.