சென்னை: தொழிற்கல்வியை குலக்கல்வி என திரிப்பதா என்று சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவுவுக்கு, பாஜக மாநில பொருளாளர் எஸ்.ஆர். சேகர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக எஸ்.ஆர்.சேகர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பிரதமரின் ஸ்ரீ பள்ளிகள் தமிழகத்தில் வேண்டும் என்று கோரிக்கை வைத்தது தமிழக அரசு தான். ஸ்ரீ பள்ளிகள் புதிய கல்விக் கொள்கையின் ஒரு அம்சம் என்பதும் தமிழக அரசுக்கு நன்றாகவே தெரியும். புதிய கல்விக் கொள்கையில் இணையாமல் ஸ்ரீ பள்ளிகள் மட்டும் எங்களுக்கு வேண்டும் என்று கேட்பது மக்களை திசை திருப்பும் செயல் மட்டும் தான்.
ரேஷன் கடையில் எனக்கு அரிசி மட்டும் வேண்டும், மற்றதெல்லாம் எனக்கு தேவையில்லை, அதனால் எனக்கு ரேஷன் கார்டு வேண்டாம் என்று சொன்னால் தமிழக அரசு ஏற்றுக் கொள்ளுமா. ரேஷன் கார்டைப் பெற்றுக் கொண்டு, என்னென்ன பொருள் தேவையோ அவற்றை வாங்கிக் கொள்ளுங்கள் என்றுதானே சொல்வார்கள்.
அதுபோலத்தான் புதியக் கல்விக் கொள்கையின் ஒரு அம்சமாக இருக்கும் ஸ்ரீ பள்ளிகள் வேண்டும் என்று தமிழக அரசு கேட்டால், புதிய கல்விக் கொள்கையில் இணைந்த மாநிலங்களுக்கு மட்டும் தான் வழங்க முடியும் என்று மத்திய அரசு சொல்வது நியாயம் தானே.
இந்த எளிய உண்மையை மக்களிடம் மறைத்து, மத்திய அரசு புதிய கல்விக் கொள்கையில் இணைய கட்டாயப்படுத்துகிறது என்று கூறி வருகின்றனர் திமுகவினர். புதிய கல்விக் கொள்கையில் கட்டாயம் என்ற வார்த்தைக்கே இடம் இல்லை. எல்லாவற்றையும் கட்டாயப்படுத்தி மாநிலங்கள் மீது திணிப்பதற்கு இது என்ன காங்கிரஸ் அரசா?
ஒரு அரசாங்க அதிகாரி, தன்னுடைய கையெழுத்தைக் கூட ஹிந்தியில் போட வேண்டும் என்று திணித்த காங்கிரசோடு கூட்டணி வைத்துக் கொண்டு, புதிய கல்விக் கொள்கை இந்தியையும் சமஸ்கிருதத்தையும் திணிக்கிறது என்று வாய் கூசாமல் கூறி இருக்கிறார் அப்பாவு.
நாட்டில் 10 கோடிக்கு மேல் தமிழ் பேசும் மக்கள் உள்ளனர் என்றும், சமஸ்கிருதம் பேசுவோர் 25 ஆயிரம் பேர் தான் இருப்பார்கள் என்றும், அந்த மொழியை கட்டாயம் படிக்க வேண்டும் என்பது நியாயமா என்றும் அப்பாவி தனமாக கேள்வி கேட்டிருக்கிறார் அப்பாவு.இதனால் தான் தமிழக முதல்வர் சமஸ்கிருதம் தேவையில்லை என்கிறாராம்.
தமிழக முதல்வர் மட்டுமல்ல, ஒட்டுமொத்த புதிய கல்விக் கொள்கையே அதை தான் கூறுகிறது. புதிய கல்விக் கொள்கையில் சமஸ்கிருதம் தேவையே இல்லை. அவ்வளவு ஏன்? நேரு காலத்தில் இருந்து காங்கிரஸ் திணித்த ஹிந்தி கூட தேவையே இல்லை. தாய்மொழி தான் தேவை.
தமிழ்நாட்டில் சில பள்ளிகளில் தாய்மொழியான தமிழைப் பேசினால் கூட அபராதம் விதிக்கும் நிலை இருக்கும் பொழுது, யாருக்கும் அஞ்சாமல் தாய்மொழியை கற்க வேண்டும் என்று தாய் மொழியை கட்டாயமாக்குவது தான் புதிய கல்விக் கொள்கை.
வேற்றுமையில் ஒற்றுமையைக் காண்போம் என்பதுதான் இந்தியாவின் கொள்கை. இந்தியாவின் பன்முகத் தன்மையை ஆராதிப்பது தான் புதிய கல்விக் கொள்கை. தமிழ், கன்னடம், தெலுங்கு, சமஸ்கிருதம், ஹிந்தி, மலையாளம், ஒடியா போன்ற செம்மொழிகளில் ஏதேனும் ஒன்றை மாணவர்களே தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம் என்று, மாணவர்களுக்கான சுதந்திரத்தை கொடுப்பதுதான் புதிய கல்விக் கொள்கை.
யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற தமிழ் குடியின் கொள்கைக்கு ஏற்ப உலகம் முழுக்க இணைப்பு மொழியாக இருக்க ஒரு அந்நிய மொழியை கற்க வழி செய்வதுதான் புதிய கல்விக் கொள்கை.
நியாயமாக பார்த்தால் ஹிந்தி பேசும் மாநிலங்களில் கூட, தமிழ், மலையாளம், கன்னடா, ஒடியா போன்ற தென் மாநில மொழிகளை மாணவர்கள் பயில வாய்ப்பு அளித்திருக்கிறது புதிய கல்விக் கொள்கை. தமிழ் மொழியை வட இந்தியர்களுக்கும் கொண்டு போய் சேர்க்கும் வாய்ப்பை உருவாக்கியிருக்கிறது புதிய கல்விக் கொள்கை.
இந்தியா முழுக்க இருக்கும் பல்வேறு மொழிகளை, அனைத்து தரப்பு மாநில மாணவர்களும் கற்பதற்கு வழி வகுக்கிறது புதிய கல்விக் கொள்கை. ஆனால், அது சமஸ்கிருதத்தை மட்டும் திணிக்கிறது என்று இவர்கள் வசதிக்கு மாற்றி பேசுவது வெறும் அரசியல் லாபத்திற்காக மட்டும்தான்.
இப்போது, அமெரிக்கா சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் ஸ்டாலின், சென்னை பள்ளிகளில் பிரெஞ்சு மொழியை பயிற்றுவிக்க புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திட்டு இருக்கிறாரே. தமிழ்நாட்டில் சமஸ்கிருதம் பேசுபவர்களாவது 25 ஆயிரம் பேர் இருக்கிறார்கள் என்று கூறுகிறீர்கள். எத்தனை கோடி பேர் பிரெஞ்சு மொழி பேசுகிறார்கள் என்று பிரஞ்சு மொழியை திணிக்க நினைக்கிறார் ஸ்டாலின் என்ற கேள்விக்கான பதிலை உங்களிடமே விட்டுவிடுகிறேன்.
Vocational education என்ற வார்த்தையைப் பிடித்துக் கொண்டு அது குலக்கல்வி திட்டத்தை மீண்டும் கொண்டு வருவதாக மக்களை ஏமாற்றுகிறார்கள் திமுகவினர். Vocational education என்று கூகுளில் தேடினாலே அதற்கான அர்த்தம் புரிந்துவிடும். தொழில்கல்வி என்பதை குலக்கல்வியாக இவர்கள் திரிக்கிறார்கள். சரி தொழில் கல்வியும் குலக்கல்வியும் ஒன்று என்றே வைத்துக் கொள்வோம், தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக்கழகத்தில் Vocational Education Department எதற்காக இருக்கிறது?
Diploma, M.Phil, PHD வரை அனைத்து நிலைக்கும் Vocational Education தமிழ்நாடு திறந்து நிலை பல்கலைக்கழகத்தால் வழங்கப்படுகிறது. ஒன்று இரண்டல்ல, Vocational diploma என்று எடுத்துக் கொண்டால் அதில் 32 courses இருக்கின்றன.
அப்படியானால், தமிழ்நாட்டிலேயே அதிகாரப்பூர்வமாக குலக்கல்வி திட்டம் நடைமுறையில் இருக்கிறது என்று கூற வருகிறாரா அப்பாவு? இன்னும் அமெரிக்காவில் 1963 இல் இருந்தே vocational education இருக்கிறது என்ற உண்மை அப்பாவுக்கு தெரியுமா இல்லையா என்று நமக்கு தெரியவில்லை.
மொத்தத்தில் புதிய கல்விக் கொள்கை திட்டம் என்பதை பிரதமர் மோடி கொண்டு வருகிறார் என்ற ஒரே காரணத்திற்காக தான் திமுக எதிர்க்கிறது. சமகாலத்திற்கு ஏற்ற கல்வியை இளம் தலைமுறையினர் பெற்றுவிட்டால், இவர்களின் அரசியல் நாடகங்கள் பலிக்காது என்பதால், புதிய கல்விக் கொள்கையை எதிர்க்கிறார்கள்” என விமர்சித்துள்ளார்.