‘தொழிற்சங்க சொத்து விவகாரத்தில் அவதூறு’ – ரூ.1 கோடி இழப்பீடு கேட்டு வைகோவுக்கு நோட்டீஸ் | Tiruppur S. Duraisamy seeking compensation for Vaiko’s defamatory remarks

1372967
Spread the love

திருப்பூர்: கோவை மற்றும் பெரியார் மாவட்ட திராவிட பஞ்சாலைத் தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் தொழிற்சங்க விஷயத்தில், ரூ.350 கோடி தொழிற்சங்க சொத்தை அபகரித்துக்கொண்டதாக வைகோ அவதூறான குற்றச்சாட்டு கூறியதாகக் கூறி, சங்கத்துக்கு ரூ.1 கோடி இழப்பீடு கேட்டு சட்டரீதியான நடவடிக்கையை திருப்பூர் சு.துரைசாமி மேற்கொண்டுள்ளார்.

கோவை மற்றும் பெரியார் மாவட்ட திராவிட பஞ்சாலைத் தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் பொதுச் செயலாளர் சு.துரைசாமி (90) சார்பில் வழக்கறிஞர்கள் பாலகிருஷ்ணன், பாலகுமார் மற்றும் பவித்ராஸ்ரீ ஆகியோர் அனுப்பிய நோட்டீஸின் விவரம்: திராவிட பஞ்சாலைத் தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தில், 1960-ம் ஆண்டு முதல் திருப்பூர் சு.துரைசாமி பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டு, இன்று வரை நடந்த அனைத்து தேர்தல்களிலும் பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டு, வயதைத் தாண்டி தொழிலாளர்களுக்கு பணியாற்றி வருகிறார்.

65 ஆண்டு காலமாக, தொழிலாளர் நலனுக்காக தொடர்ந்து பணியாற்றிக் கொண்டிருக்கிறார். மேலும் 2 முறை திருப்பூரில் எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டு, ஏராளமான மக்கள் பணியாற்றியவர். 1958-ம் ஆண்டு துவங்கப்பட்ட தொழிலாளர் சங்கம், 1959-ம் ஆண்டு பதிவு செய்யப்பட்டது. சங்கத்தை வழிநடத்த தனியாக சட்ட விதிகள் உள்ளன. ஒரு அரசியல்வாதியாக தொழிலாளி வர்க்கத்துக்கும், பொதுமக்களுக்கும் சேவையாற்றியவர்.

சங்கத்தின் உறுப்பினர்களின் பங்களிப்புடன் வாங்கப்பட்ட சொத்துக்களை கையாள்வதில், அதன் சொந்த துணைச் சட்டங்களைக் கொண்ட ஒரு தனிப்பட்ட அமைப்பாகும். சங்கம் 1993-ம் ஆண்டு வரை திமுகவை ஆதரித்தது, அதன் பிறகு, வாரிசு அரசியலுக்கு எதிராக குரல் எழுப்பியதற்காக வைகோ, திமுகவிலிருந்து நீக்கப்பட்ட பிறகு, மதிமுகவை ஆதரித்தது.

1993-ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் வரை சென்று வழக்குகளில் வெற்றி பெற்று, சங்க சொத்துகளை திமுகவிடமிருந்து பாதுகாக்கப்பட்டது. இது தொடர்பாக, கடந்த 2021-ம் ஆண்டு நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில், திருப்பூர் சு.துரைசாமிக்கு பாராட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, மதிமுகவின் கட்சி பத்திரிகையான சங்கொலியில் வெளியிடப்பட்டது.

தொடர்ந்து கடந்த 2023-ம் ஆண்டு மே 29-ம் தேதி, அவைத் தலைவர் பதவில் இருந்து ராஜினாமா செய்தார். மதிமுகவின் வாரிசு அரசியலுக்கு எதிர்ப்புத் தெரிவித்து கட்சியின் முதன்மை உறுப்பினர் பதவியையும் உதறினார்.

இந்நிலையில், கடந்த ஜூலை 17-ம் தேதி விழுப்புரத்தில் மதிமுக மண்டல அளவிலான நிர்வாகிகள் கூட்டத்தில், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, துரைசாமியின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில், திமுக சொத்துகளை, தனது பெயரில் உள்ள அறக்கட்டளையில் இணைத்து அபகரித்ததாக செய்தியாளர்களிடம் தெரிவித்தார். “இது ஒரு அப்பட்டமான பொய் என்பதை திமுக கூட ஏற்றுக்கொள்ளும்”. இந்த அவதூறு, திருப்பூர் சு.துரைசாமிக்கு, அவப்பெயரை ஏற்படுத்தி உள்ளது.

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ ரூ.350 கோடி மதிப்புள்ள திமுக சொத்துகளை கையகப்படுத்தியதாக, துரைசாமி மீது குற்றம்சாட்டி அவதூறு செய்ததற்காக, இந்த நோட்டீஸ் கிடைக்கப்பெற்ற 15 நாட்களுக்குள் நிபந்தனையற்ற மன்னிப்பு அல்லது ரூ.1 கோடி இழப்பீடு கோரி சட்டப்பூர்வ நோட்டீஸ் அனுப்பி வைக்கப்படுகிறது. வைகோ நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் அல்லது அவதூறுக்கு இழப்பீடாக ரூ.1 கோடியை காசோலையை சங்கத்துக்கு செலுத்த வேண்டும் என்று நோட்டீஸில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *