தொழில்நுட்ப பல்கலை.யில் மாணவியிடம் அத்துமீறல்: புதுச்சேரி அமைச்சரிடம் துணைவேந்தர் விளக்கம் | Vice-Chancellor explains to the Puducherry Minister over Sexual harassment issue in university

1347768.jpg
Spread the love

புதுச்சேரி: தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் வடமாநில மாணவியிடம் அத்துமீறல் சம்பவம் தொடர்பாக கல்வி மற்றும் உள்துறை அமைச்சர் நமச்சிவாயத்திடம் துணைவேந்தர் இன்று விளக்கம் தந்ததார். பல்கலைக்கழக பாதுகாப்பை அதிகரிக்க போலீஸாருக்கு அமைச்சர் உத்தரவிட்டார்.

புதுவை காலாப்பட்டில் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் உள்ளது. கடந்த 12-ம் தேதி பல்கலைக்கழக வளாகத்தில் வடமாநில மாணவியிடம் உள்ளூரை சேர்ந்த சில இளைஞர்கள் அத்துமீறிய சம்பவம் நடந்தது. மாணவி தன்னுடன் படித்த மாணவருடன் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார். அங்கு வந்த உள்ளூர் இளைஞர்கள் அவர்களை படம் எடுத்துள்ளனர். இதை தட்டிக்கேட்ட மாணவிக்கும், அவர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

இதில் வடமாநில மாணவியை இளைஞர்கள் தாக்கினர். இதனால் காயமடைந்த மாணவி கதிர்காமம் இந்திராகாந்தி மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இந்தச் சம்பவம் தொடர்பாக மாணவி புகார் தரவில்லை. அதேநேரத்தில் இது தொடர்பான தகவல் வெளியானது. சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவிக்கு பாலியல் தொல்லை ஏற்பட்ட நிலையில், புதுவை தொழில்நுட்ப பல்கலைக்கழகத்திலும் நிகழ்ந்த இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. பல்கலைக்கழக பதிவாளர் காலாப்பட்டு போலீஸுல் ஒரு புகார் அளித்தார். இந்த புகாரின்பேரில் 2 சிறுவர்கள் உட்பட 4 பேரை போலீஸார் கைது செய்தனர்.

இது தொடர்பாக அரசியல் கட்சியினர், மாணவியிடம் புகார் பெற்று ஏன் வழக்கு பதியவில்லை. மாணவி பாதிக்கப்பட்டதை மறைப்பதில் அரசியல் தலையீடு உள்ளது என குற்றம்சாட்டி வருகின்றனர். இச்சம்பவம் குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும். வெளியாட்கள் நுழைவதை தடுக்கும் வகையில் பல்கலைக்கழகத்தின் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும் என கோரிக்கை வலுக்கிறது.

இந்த நிலையில், புதுச்சேரி கல்வி மற்றும் உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், பல்கலைக்கழக துணைவேந்தர் மோகனை அழைத்து இன்று விளக்கம் கேட்டார். துணைவேந்தர் மோகன் பல்கலைக்கழக அதிகாரிகளுடன் அமைச்சர் நமச்சிவாயத்தை சந்தித்து பல்கலைக்கழக வளாகத்தில் நடந்த சம்பவம் குறித்து விளக்கம் அளித்தார். அப்போது பல்வேறு கேள்விகளை கேட்டு அமைச்சர் நமச்சிவாயம் விளக்கம் பெற்றார். தொடர்ந்து தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் பாதுகாப்பை அதிகப்படுத்த வேண்டும் என துணைவேந்தர் கோரிக்கை வைத்தார். இதையேற்ற அமைச்சர் நமச்சிவாயம், பல்கலைக்கழக பாதுகாப்பை அதிகரிக்கும்படி போலீஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *