தொழில்முனைவோருக்கு கொடுத்த வாக்குறுதியை திமுக அரசு உடனே நிறைவேற்ற வேண்டும்: அண்ணாமலை வலியுறுத்தல் | DMK government should immediately fulfill its promise to entrepreneurs annamalai

1348634.jpg
Spread the love

சென்னை: சிறு, குறு, நடுத்தர தொழில்முனைவோர்களுக்கு கொடுத்த வாக்குறுதியை திமுக உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்ட அறிக்கை: திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்தே, தொடர்ச்சியாக மின் கட்டணத்தை உயர்த்தி, பொதுமக்களை இன்னலுக்குள்ளாக்கிக் கொண்டிருக்கிறது. விளம்பரத்துக்காக, கண்துடைப்பு அறிவிப்புகளை வெளியிட்டு, தொழில்துறையினரையும் ஏமாற்றுகிறது. இதனால் சிறு, குறு, நடுத்தர தொழில்முனைவோர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கோயம்புத்தூரில் மட்டும் 12 கிலோவாட் மின்சுமைக்குக் குறைவாகப் பயன்படுத்தும் சுமார் 52,367 சிறு தொழிற்சாலைகள் உள்ளன. ஒவ்வொரு ஆண்டும் திமுக அரசின் மின்கட்டண உயர்வால், இந்தச் சிறு தொழில் நிறுவனங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டன. எனவே, இந்தச் சிறு தொழில்களுக்கான மின்சார இணைப்பு வகையை III (B) ல் இருந்து III A (1) ஆக மாற்ற வேண்டும் என்று தொழில் நிறுவனக் கூட்டமைப்புகள் கோரிக்கை விடுத்தனர். இதனால், மின் கட்டணம், ஒரு யூனிட்டுக்கு ரூ.9.60 ல் இருந்து ரூ.4.65 ஆகக் குறையும். திமுக அரசிடம் பலமுறை கோரிக்கை விடுத்து, பல ஆர்ப்பாட்டங்களை நடத்திய பிறகு, இது குறித்து தமிழக மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் கருத்தை பெற்ற பின் பரிசீலிக்கப்படும் என்று முதல்வர் அறிவித்தார்.

இதையடுத்து, கடந்த 2023-ம் ஆண்டு செப்.29-ம் தேதி அன்று, தமிழக மின்சார ஒழுங்குமுறை ஆணையம், தமிழக மின்சார வாரியத்துக்குஅனுப்பிய கடிதத்தில், 12 கிலோ வாட் மின்சுமைக்குக் குறைவாகப் பயன்படுத்தும் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான கட்டண வகையை, III-B வகையிலிருந்து, III-A(1) வகைக்கு மாற்றலாம் என்றும், இந்த மாற்றம், இனி வரும் காலங்களுக்கான மின்கட்டணக் கணக்கீட்டில் நடைமுறைப்படுத்தப்படும் என்றும், இந்த நிறுவனங்கள், 12 கிலோ வாட் மின்சுமைக்கு அதிகமாகப் பயன்படுத்தும்போது, தானியங்கி முறையில், அவர்களுக்கான மின்கட்டணம் III-B பிரிவுக்கு மாற்றப்படும் என்றும் கூறப்பட்டிருந்தது. ஆனால், இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டு, சுமார் ஒன்றரை ஆண்டுகள் கடந்தும், இந்த சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களிடம், உயர்த்தப்பட்ட மின் கட்டணமே வசூலிக்கப்படுகிறது.

எனவே, 12 கிலோ வாட் மற்றும் அதற்குக் குறைவான மின்சுமையைப் பயன்படுத்தும் இந்த நிறுவனங்கள் அனைத்தையும், உடனடியாக III-B வகையிலிருந்து, III-A(1) வகைக்கு மென்பொருள் வாயிலாக, தானியங்கி முறையில் மாற்றம் செய்ய வேண்டும். இதற்கான அறிவிப்பு வெளிவந்த மாதத்தில் இருந்து, கடந்த ஒன்றரை ஆண்டுகளாக, இந்த நிறுவனங்களிடம் வசூலித்த அதிகப்படியான கட்டணத்தைத் திரும்ப வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *