“தோனி ‘போதும்’ என்று கூறுவதே நல்லது” – சஞ்சய் பாங்கர் பகிரங்கம் | It would be better for Dhoni to say enough – Sanjay Bangar reveals

1362438.jpg
Spread the love

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிடமும் சிஎஸ்கே தோற்று இன்னும் ஒரேயொரு போட்டி மட்டுமே உள்ள நிலையில், படுமோசமாக அட்டவணையில் கடைசி இடத்தில் உள்ளது.

ஒரு போட்டித் தொடரில் ஒரு அணி 13 போட்டிகளில் 10 போட்டியில் தோற்கிறது என்றால் கேப்டன்சி, அணித் தேர்வு, வீரர்களின் கடப்பாடு, ஸ்பிரிட் என்று அனைத்தும் கேள்விக்குட்பட்டே தீரும். இதில் தோனி பாவம் அவர் என்ன செய்வார் என்று ஒருதலைபட்சமாக வக்காலத்து வாங்க முடியாது. அவருக்கு போதுமென்ற மனம் வேண்டும் என்று பரிந்துரைக்கிறார் சஞ்சய் பாங்கர்.

ஆகாஷ் சோப்ராவோ இன்னும் ஒரு படி மேலே போய் 7 வீரர்களை சிஎஸ்கே உடனடியாக விடுவித்தால்தான் அடுத்த ஐபிஎல் தொடருக்காவது ஓர் இளம் சவால் அணியை உருவாக்க முடியும் என்று கூறுகிறார். இந்த அணியை வைத்துக் கொண்டு இப்போதிருக்கும் எந்த ஐபிஎல் அணியையும் சிஎஸ்கே வெல்லவே முடியாது என்பதுதான் கசப்பான உண்மை.

முதலில் அவர்கள் நல்ல தலைமைத்துவத்தை அடையாளம் கண்டிருக்க வேண்டும், பிராண்ட் இமேஜ் என்று வயதான தோனியை ஊன்று கோல் வைத்து ஆடும் வரைக்கும் அணியில் நீடிக்க வைப்பது அணியின் பெரும் சரிவுக்குக் காரணமாக அமைந்தது என்பதும் கசப்பான உண்மையே.

சோப்ராவின் விடுவிக்க வேண்டிய சிஎஸ்கே வீரர்கள் பட்டியலில் அஸ்வின், ஜடேஜா, ரச்சின் ரவீந்திரா, டெவன் கான்வே, விஜய் சங்கர், தீபக் ஹூடா, ராகுல் திரிபாதி ஆகியோர் உள்ளனர். ஆனால் தோனி இல்லை. ஆனால் சஞ்சய் பாங்கரோ ‘தோனி போதும் என்று நிறுத்திக் கொள்ள வேண்டும்’ என்று கூறியுள்ளார்.

சஞ்சய் பாங்கர் கூறுவது இதுதான்: “இத்தகைய ஐபிஎல் போன்ற போட்டிகளும் சவால்களும் நிரம்பிய சூழலில் 43 வயதில் ஒருவர் ஆடுவது மிக மிகக் கடினம். ஏன் நாம் போட்டி நிறைந்த சூழலை எடுத்துக் கொள்ள வேண்டும், 43 வயதில் உள்ளூர் கிரிக்கெட்டே மிகக்கடினமே. உடல் ஒத்துழைக்காது.

கடைசியில் சிஎஸ்கே வெற்றியோ தோல்வியோ எதுவாக இருந்தாலும் அது தோனியைக் குறித்தே வந்து சேரும். நான் தோனி இடத்தில் இருந்தால் ‘போதும்’ என்று கூறிவிடுவேன். அதாவது, நான் போதிய வரை விளையாடி விட்டேன், உரிமையாளரின் நலனையும் காத்தேன், போதும் நான் நகர வேண்டும் என்று முடிவெடுக்க வேண்டிய நேரம் இது.

தோனி இருந்து கொண்டே அணியை இன்னொரு கட்டத்திற்கு மாற்ற வேண்டியுள்ளது, மாற்றம் விரைவில் செய்ய வேண்டியுள்ளது என்றால் அதைச் செய்வதற்கு இதைவிட உரிய நேரம் இல்லை. அதாவது தோனி என்ன தேற்றிக் கொள்ள வேண்டுமென்றால், நாம் இல்லாவிட்டாலும் அணி தானாகவே வளரும் அவர்கள் பார்த்துக் கொள்வார்கள் என்ற மனநிலைக்கு அவர் வர வேண்டும்.

அணியில் மாற்றங்கள் நிகழ ஓராண்டு ஆகலாம், ஆனால் என்னால் அந்த ஒட்டுமொத்த நடைமுறைகளிலும் இருக்க முடியாது என்ற மனநிலைக்கு தோனி தன்னை ஒப்புக் கொடுத்து போதும் என்று முடிவெடுக்க வேண்டும். அதாவது தோனி இடத்தில் நான் இருந்தால் இதைத்தான் செய்வேன். இப்படித்தான் யோசி்ப்பேன்” என்று கூறியுள்ளார் சஞ்சய் பாங்கர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *