தோற்றத்துக்கும் ஞானத்துக்கும் தொடர்பில்லை- நீதி சொல்லும் ரோஜா-கள்ளிச்செடியின் கதை!

Spread the love

தோற்றத்துக்கும் ஞானத்துக்கும் தொடர்பில்லை. இதற்கு உதாரணமாக இருந்தவர் அஷ்டவக்ரர். எட்டுக் கோணலாக அமைந்த உடல், பார்ப்பதற்கே அருவருப்பை ஏற்படுத்தும் தோற்றம். ஆனால், அவர் யாக்ஞவல்கியருக்கும், ஜனகமகாராவுக்குமே குருவாக விளங்கிய மகாஞானி.

`உருவுகண்டு எள்ளாமை வேண்டும் உருள்பெருந்தேர்க்கு

அச்சாணி அன்னார் உடைத்து’ என்கிறார் வள்ளுவர். உருவத்தால் சிறியவர் என்பதற்காக ஒருவரைக் கேலி செய்யக் கூடாது. பிரமாண்டமான தேர் ஓடுவதற்குக் காரணமாக இருப்பது சின்னஞ் சிறிய அச்சாணிதான்’ என்பது குறளின் பொருள்.

அடர்ந்த காடு. ஒருநாள் அங்கே ஒரு ரோஜா பூத்தது. கண் திறந்த ரோஜா சுற்றிலும் பார்த்தது. பிறகு அருகிலிருந்த மரத்திடம் சொன்னது… “இந்தக் காட்டிலேயே மிகவும் அழகானவள் நான்தான். அப்படித்தானே?’’ என்றது.

“நீ அழகாகத்தான் இருக்கிறாய். ஆனால், உன்னை விடவும் சிறந்தவர்களும் உண்டு’’ என்றது மரம்.

இதைக் கேட்டு ரோஜா முகத்தைத் திருப்பிக்கொண்டது. தன் அழகின் பொருட்டு ரோஜாவுக்கு ஒரு கர்வம் உள்ளே வந்து உட்கார்ந்துகொண்டது. ரோஜா இருந்த இடத்திலிருந்து சற்று தூரத்தில் ஒரு கள்ளிச்செடி இருந்தது. அதைப் பார்க்கும்போதெல்லாம் ரோஜாவுக்கு ஆத்திரமாக வரும். “சே… எவ்வளவு அவலட்சணமான படைப்பு… உடலெல்லாம் முட்கள்… இறைவன் ஏன்தான் இதைப் படைத்தானோ?’’ என்று நொந்துகொள்ளும்.

அருகிலிருந்த மரம் ஒருநாள் சொன்னது… “அப்படிச் சொல்லாதே… நாம் எல்லோருமே இறைவனின் படைப்பு. அவனுடைய ஒவ்வொரு படைப்புக்கும் ஒரு காரணம் இருக்கும்…’’ ஆனாலும், ரோஜாவுக்கு தன்மேல் இருந்த கர்வம் குறையவில்லை.

பருவநிலை மாறியது. கோடைக்காலம் வந்தது. கடும் வறட்சி. மழை இல்லை. நீர் கிடைப்பது அரிதானது. ரோஜாவே மெல்ல மெல்ல வாட ஆரம்பித்தது. ஒருநாள் சில பறவைகள் பறந்து வந்தன. கள்ளிச்செடியின் மீது அமர்ந்தன. தம் அலகுகளால் கள்ளிச்செடியைக் கொத்தின. அதற்குள் இருந்த துளியூண்டு நீர் அவற்றின் தாகம் தீரப் போதுமானதாக இருந்தது. களைப்பு நீங்கிப் பறந்தன பறவைகள். இந்தக் காட்சியை வியப்போடு பார்த்தது ரோஜா.

“என்ன பார்க்கிறாய்?’’ என்றது மரம்.

“பறவைகள் கொத்தும்போது அந்தக் கள்ளிச்செடிக்குக் காயம் ஏற்படாதா?’’

“ஏற்படும்தான். பறவைகள் தாகத்தால் தவிக்கும்போது, கள்ளிச்செடிக்கு அந்தக் காயம் ஒன்றும் பெரிதில்லை.’’ ரோஜாவின் தலை கவிழ்ந்தது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *