ஃபென்ஜால் புயலால் விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, சேலம், திருவண்ணாமாலை உள்ளிட்ட வட தமிழக மாவட்டங்களில் கனமழை பெய்து பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. மேற்கண்ட பகுதிகளில் பல்வேறு இடங்களிலும் வெள்ளம் சூழ்ந்து மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியிருந்த நிலையில், மக்கள் மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றனர்.
இந்த நிலையில் புயலால் பெரும் பாதிப்பைச் சந்தித்துள்ள தமிழகத்துக்கு கேரளம் ஆதரவாக துணை நிற்பதுடன் உதவி வழங்க தயாராக இருப்பதாக கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து கேரள முதல்வருக்கு தமிழக முதல்வர் நன்றி தெரிவித்துள்ளார். முதல்வர் மு. க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில், “தோழர் பினராயி விஜயனுக்கு நன்றி” எனப் பதிவிட்டுள்ளார்.
”தாங்கள் அளித்துள்ள ஆதரவுக்கு நன்றி. கேரளத்தின் உதவும் மனப்பான்மைகும் ஆதரவுக்கும் தமிழக மக்கள் மிகுந்த மதிப்பளிப்பதாக” அவர் குறிப்பிட்டுள்ளார். நாம் ஒன்றிணைந்து மறுகட்டமைப்பை மேற்கொண்டு வலிமையாக மீண்டெழுவோம் எனப் பதிவிட்டுள்ளார்.