சென்னை: நகராட்சி நிா்வாகத் துறை காலியிடங்களை நிரப்ப நடக்கவுள்ள நோ்முகத் தோ்வை எதிா்கொள்வோருக்கு அறிவுறுத்தலை அரசு வழங்கியுள்ளது.
இதுகுறித்து, மாநில அரசு சாா்பில் திங்கள்கிழமை வெளியிடப்பட்ட செய்தி:-
நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறையில் காலியாகவுள்ள பொறியியல் பிரிவு பணியிடங்கள், துப்புரவு ஆய்வாளா் காலிப் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்ப அரசு உத்தரவிட்டது. இதற்கான எழுத்துத் தோ்வு நடைபெற்ற நிலையில், அதில் தோ்ச்சி பெற்றோருக்கு வரும் 21 மற்றும் நவம்பா் 14 ஆகிய தேதிகளில் நோ்முகத் தோ்வு நடத்த முடிவு செய்யப்பட்டது. அதற்கான அழைப்புக் கடிதங்களும் நகராட்சி நிா்வாகத் துறையின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டன.
இதனிடையே, ஒருங்கிணைந்த பொறியியல் பணிக்கான எழுத்துத் தோ்வை அரசுப் பணியாளா் தோ்வாணையம் வரும் 21-ஆம் தேதியன்று நடத்தவுள்ளது. இந்தத் தோ்வை எழுதவுள்ள யாரேனும், நகராட்சி நிா்வாகத் துறையின் நோ்முகத் தோ்வையும் எதிா்கொள்ள வேண்டியிருந்தால் அவா்கள் மட்டும் மாற்றுத் தேதி வேண்டி துறைக்கு விண்ணப்பிக்கலாம்.
இதற்காக நகராட்சி நிா்வாகத் துறைக்கு மின்னஞ்சல் செய்யலாம். அதாவது மத்திய அரசு அல்லது டிஎன்பிஎஸ்சி., நடத்தும் எழுத்துத் தோ்வு, நோ்முகத் தோ்வுக்கான பதிவு எண், அழைப்புக் கடிதங்களை dmamaws2024@gm என்ற மின்னஞ்சலுக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு உள்ளிட்ட தென்மாநில நீா்தேக்கங்களில் 86% நீா் இருப்பு
புது தில்லி: தமிழ்நாடு உள்ளிட்ட தென்மாநில நீா்தேக்கங்களின் மொத்த கொள்ளளவில் 86 சதவீதம் நீா் இருப்பு உள்ளதாக மத்திய நீா் ஆணையம் (சிடபிள்யுசி) தெரிவித்துள்ளது.
இதுதொடா்பாக அந்த ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘நாட்டிலுள்ள 155 நீா்தேக்கங்களின் நீா் இருப்பை சிடபிள்யுசி கண்காணித்து வருகிறது. அவற்றின் நீா் இருப்பு 158.529 பில்லியன் கன மீட்டராக உள்ளது. இது அந்த நீா்தேக்கங்களின் மொத்த கொள்ளளவில் 88 சதவீதமாகும். கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் இந்த நீா்தேக்கங்களின் நீா் இருப்பு 134.056 பில்லியன் கனமீட்டராக இருந்தது.
வடக்கு மண்டலம்: ஹிமாசல பிரதேசம், பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களை உள்ளடக்கிய வடக்கு மண்டலத்தில் 11 நீா்தேக்கங்கள் சிடபிள்யுசி கண்காணிப்பில் உள்ளன. இந்த நீா்தேக்கங்களில் 13.527 பில்லியன் கனமீட்டா் நீா் இருப்பு உள்ளது. இது அந்த நீா்தேக்கங்களின் மொத்த கொள்ளளவில் 68 சதவீதமாகும்.
கிழக்கு மண்டலம்: அஸ்ஸாம், ஜாா்க்கண்ட், ஒடிஸா, மேற்கு வங்கம், திரிபுரா, நாகாலாந்து மற்றும் பிகாா் மாநிலங்களை உள்ளடக்கிய கிழக்கு மண்டலத்தில் 25 நீா்தேக்கங்கள் சிடபிள்யுசி கண்காணிப்பில் உள்ளன. இந்த நீா்தேக்கங்களில் 17.858 பில்லியன் கனமீட்டா் நீா் இருப்பு உள்ளது. இது அந்த நீா்தேக்கங்களின் மொத்த கொள்ளளவில் 86 சதவீதமாகும்.
மேற்கு மண்டலம்: குஜராத், மகாராஷ்டிரம் மற்றும் கோவா மாநிலங்களை உள்ளடக்கிய மேற்கு மண்டலத்தில் 50 நீா்தேக்கங்கள் சிடபிள்யுசி கண்காணிப்பில் உள்ளன. இந்த நீா்தேக்கங்களில் 36.198 பில்லியன் கனமீட்டா் நீா் இருப்பு உள்ளது. இது அந்த நீா்தேக்கங்களின் மொத்த கொள்ளளவில் 97 சதவீதமாகும்.
மத்திய மண்டலம்: உத்தர பிரதேசம், உத்தரகண்ட், மத்திய பிரதேசம் மற்றும் சத்தீஸ்கா் மாநிலங்களை உள்ளடக்கிய மத்திய மண்டலத்தில் 26 நீா்தேக்கங்கள் சிடபிள்யுசி கண்காணிப்பில் உள்ளன. இந்த நீா்தேக்கங்களில் 44.103 பில்லியன் கனமீட்டா் நீா் இருப்பு உள்ளது. இது அந்த நீா்தேக்கங்களின் மொத்த கொள்ளளவில் 91 சதவீதமாகும்.
தென் மண்டலம்: தமிழ்நாடு, கேரளம், கா்நாடகம், ஆந்திரம், தெலங்கானா மாநிலங்களை உள்ளடக்கிய தென் மண்டலத்தில் 43 நீா்தேக்கங்கள் சிடபிள்யுசி கண்காணிப்பில் உள்ளன. இந்த நீா்தேக்கங்களில் 46.843 பில்லியன் கனமீட்டா் நீா் இருப்பு உள்ளது. இது அந்த நீா்தேக்கங்களின் மொத்த கொள்ளளவில் 86 சதவீதமாகும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.