‘நகராத’ நகரும் படிக்கட்டுகள்: எழும்பூர் ரயில் நிலையத்தில் பயணிகள் கடும் பாதிப்பு | Escalator issue in chennai egmore railway station

1309822.jpg
Spread the love

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் 4, 5மற்றும் 10 ஆகிய நடைமேடைகளில் உள்ள நகரும் படிக்கட்டுகள் பயணிகளுக்கு பயனற்ற முறையில் இருப்பதால், முதியோர், மாற்றுத்திறனாளிகள் உட்பட பல்வேறு தரப்பினர் கடும் அவதிப்படுகின்றனர். இந்த நிலையத்தில் நகரும் படிக்கட்டுகளை முறையாக பராமரித்து, இயக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழகத்தில் முக்கிய ரயில் நிலையங்களில் ஒன்றாக எழும்பூர் ரயில் நிலையம் இருக்கிறது. இங்கிருந்து தினசரி 50-க்கும் மேற்பட்ட விரைவு ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதுபோல, சென்னை கடற்கரை முதல்தாம்பரம், செங்கல்பட்டு இடையே தினசரி 150-க்கும்மேற்பட்ட மின்சார ரயில்கள் எழும்பூர் ரயில்நிலையம் வழியாகவே இயக்கப்படுகின்றன.

தென் மாவட்டங்களுக்கு இயக்கப்படும் பெரும்பாலான ரயில்கள் இங்கிருந்து தான் புறப்படுகின்றன. அதுபோல, தென் மாவட்டங்களில் இருந்து இந்த ரயில்கள் புறப்பட்டு, சென்னைஎழும்பூருக்கு வந்தடைகின்றன. இந்த ரயில்நிலையத்துக்கு தினசரி 75,000 பேர் முதல் 1.25 லட்சம் பேர் வரைவந்து செல்கின்றனர். இதன் காரணமாக, இந்த ரயில் நிலையம் தினசரி அதிகாலை முதல் நள்ளிரவு வரை பரபரப்பாக இருக்கும்.

இந்த ரயில் நிலையத்தை உலக தரத்தில் மேம்படுத்தும் விதமாக, ரூ.735 கோடியில் மறுசீரமைப்பு பணி கடந்தஆண்டு தொடங்கி நடைபெற்று வருகிறது. இப்பணி ஒருபுறம் விறுவிறுப்பாக நடைபெற, மறுபுறம் ரயில்களின் சேவை வழக்கம்போல இயக்கப்படுகின்றன. அதேநேரத்தில், ரயில் நிலையத்துக்குள் பயணிகள் வந்து செல்ல போதிய வசதி இல்லாததால், கடும் அவதிப்படுகின்றனர்.

குறிப்பாக, நகரும் படிக்கட்டுகள் பயனற்றதாக இருக்கிறது. ரயில் நிலையத்தின் 4-வது நடைமேடையில் 2-வது நுழைவு வாயிலை ஒட்டி, ஒரு நகரும் படிக்கட்டு நெடுங்காலமாக இருக்கிறது. இந்த நகரும் படிக்கட்டில் ஏறி, 5-வது நடைமேடை முதல் 10-வது நடைமேடை வரைசெல்ல முடியும். ஆனால், தற்போது இந்த நகரும் படிக்கட்டு மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

4-வது நடைமேடையில் உள்ள நகரும் படிக்கட்டு அருகே வந்து பார்த்துவிட்டு,

படிக்கட்டு வழியாக மற்ற நடைமேடைக்கு செல்ல தயாராகும் பயணிகள்.

அதாவது, 4-வதுநடைமேடையின் கீழ் இருந்து மேல் செல்வதற்கு பதிலாக, மேலிருந்து கீழ் (4-வது நடைமேடை நோக்கி இறங்குவது போல) நோக்கி வருவதுபோல அமைக்கப்பட்டுள்ளது. இதனால், 4-வது நடைமேடைக்கு வந்து, நகரும் படிக்கட்டு வழியாக மற்ற நடைமேடைகளுக்கு செல்ல நினைத்து வரும் பயணிகள் ஏமாற்றமடைகின்றனர்.

குறிப்பாக, மற்ற நடைமேடையில் புறப்பட தயாராகஇருக்கும் விரைவு ரயில்களை பிடிக்க முடியாமல் மாற்றுத்திறனாளிகள், முதியோர் கடும் அவதிப்படுகின்றனர். உடனடியாக, நிலையத்தின் வெளிப்பகுதியில் உள்ள மின்தூக்கி அல்லது நகரும் படிக்கட்டு வழியாக மற்ற நடைமேடைக்கு செல்கின்றனர். இதுபோல, 5 மற்றும் 6-வது நடைமேடைகளுக்கு இடையே ஒரு நகரும் படிக்கட்டு நெடுங்காலமாக இயங்காமல் உள்ளது.

இதனால், வெளியூரில் இருந்து சென்னை எழும்பூரை வந்தடையும் பயணிகள் இந்த நகரும் படிக்கட்டு வழியாக மற்ற இடங்களுக்கு செல்ல முடியாத நிலை இருக்கிறது. இதுபோல, 10, 11-வது நடைமேடைகளுக்கு இடையே உள்ள நகரும் படிக்கட்டும் இயங்காமல் உள்ளது. இதனால், பயணிகள் மிகுந்த சிரமத்தை சந்திக்கின்றனர்.

பாண்டியராஜா

இதுகுறித்து, தெற்கு ரயில்வே மண்டல ஆலோசனைக்குழு உறுப்பினர் பாண்டியராஜா கூறியதாவது: உலகதரத்தில் எழும்பூர் ரயில் நிலையம் மறுசீரமைப்பு பணி மேற்கொள்ளப்படுவதை வரவேற்கிறோம். அதே நேரத்தில், இந்த ரயில் நிலையத்தின் ஒவ்வொரு நடைமேடைக்கும் பயணிகள் எளிதாக வந்து செல்ல போதிய வசதிகளைஏற்படுத்துவது அவசியமாகும். நகரும் படிக்கட்டுகள் சரியாக இயங்காததால், வயதானவர்கள், மாற்றுத்திறனாளி பயணிகள் படிக்கட்டு வழியாக மற்ற நடைமேடைகளுக்கு மிகுந்த சிரமத்துடன் செல்லும் நிலை ஏற்படுகிறது.

நகரும் படிக்கட்டு கீழிருந்து மேல் நோக்கி செல்வதற்கு பதிலாக,

மேலிருந்து கீழ் நோக்கி இயங்குவதை பார்த்து அதிர்ச்சி அடைந்து நிற்கும் பயணி.

எனவே, நகரும் படிக்கட்டுகளை முறையாக பராமரிக்க வேண்டும். தொடர்ந்து, கண்காணிக்க வேண்டும். ஏதாவது பழுது ஏற்பட்டால் உடனுக்குடன் சரிசெய்ய வேண்டும். மேலும் முதியவர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு வசதியாக, பேட்டரி வாகனம் அனைத்துநடைமேடைகளுக்கும் செல்லும் விதமாக இயக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இதுகுறித்து சென்னை ரயில்வே கோட்ட அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது அவர் கூறியதாவது: எழும்பூர் ரயில் நிலையத்துக்கு தினசரி மாலை நேரத்தில் சோழன், காச்சிகூடா, சார்மினார் ஆகிய ரயில்கள் ஒரே நேரத்தில் வரும்போது, அங்குள்ள நடைமேம்பாலத்தில் கடும் நெரிசல் ஏற்படுகிறது. இதை தவிர்க்க, குறிப்பட்ட நேரத்துக்கு மட்டும் 4-வது நடைமேடையில் உள்ள நகரும் படிக்கட்டு கீழே இறங்குவதுபோல மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

5-வது மற்றும் 6-வது நடைமேடைகளுக்கு இடையில் உள்ள நகரும் படிக்கட்டு பழுதடைந்துள்ளது. இதை பராமரிக்க சென்னை ரயில்வே கோட்ட மேலாளர் உத்தரவிட்டுள்ளார். ஆனால், நிதி ஒதுக்காததால் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதுபோல, 10, 11-வது நடைமேடைகளுக்குஇடையே உள்ள நகரும்படிக்கட்டு பழுதடைந்துள்ளது. போதிய நிதி ஒதுக்கியபிறகு, பழுது நீக்கி பயன்படுத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *