சென்னை: தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் சென்னை பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம் திட்டப்பகுதியில் 1965 முதல் 1977 காலகட்டத்தில் 6.20 ஹெக்டேர் பரப்பளவில் 1356 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டன. அங்கு தரை மற்றும் முதல் தளம், தரை மற்றும் 3 தளம், தரை மற்றும் 4 தளம் என 3 வகையாக குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன.
இந்த கட்டிடங்கள் கட்டப்பட்டு 60 ஆண்டுகள் ஆகும் நிலையில் தற்போது சிதலமடைந்த நிலையில் உள்ளன. சென்னை ஐஐடி மற்றும் அண்ணா பல்கலைக்கழக வல்லுநர்கள் குழு அந்த கட்டிடங்களின் உறுதித் தன்மையை ஆய்வு செய்து, 10 ஆண்டுகளுக்கு முன்பே மக்கள் வாழ தகுதியற்றது என சான்றளித்து விட்டன.
இக்கட்டிடங்களை அகற்றிவிட்டு மறுகட்டுமானம் செய்யவும் அக்குழு அரசுக்கு பரிந்துரைத்துள்ளது. இப்பகுதியில் குடும்பங்கள் பெருகி வரும் நிலையில் ஏராளமான ஆக்கிரமிப்பு வீடுகளும் அங்கு கட்டப்பட்டுள்ளன. இதனால் இப்பகுதியில் மறுகட்டுமானம் செய்ய அதிகாரிகள் உள்ளே நுழைந்தாலே, அதற்கு பொதுமக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர்.
கடந்த 2022-ம் ஆண்டு ஜனவரி மற்றும் மார்ச் மாதங்களில் பொதுமக்கள் தங்கள் குடியிருப்பகளை காலி செய்ய வாரியத்தால் அறிவிப்பாணைகள் வழங்கப்பட்டது. ஆனால் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேறவில்லை.
அதனைத் தொடர்ந்து அதே ஆண்டு செப்டம்பரில் மயிலாப்பூர் தொகுதி எம்எல்ஏ தலைமையிலும், கடந்த செப்டம்பரில் தென் சென்னை எம்பி தலைமையிலும், செப்.23, நவ,6, நவ.11 ஆகிய தேதிகளில் வாரிய கண்காணிப்பு பொறியாளர் தலைமையிலும் பொதுமக்கள் மற்றும் மீனவ கிராம சபையினருடனும் பேச்சுவார்த்தைகள் தொடர்ச்சியாக நடைபெற்ற நிலையில் சுமுக தீர்வு எட்டப்படவில்லை. +
பொதுமக்கள் எதிர்ப்பு: இந்நிலையில் கடந்த டிச.4-ம் தேதி இரவு 134-வது பிளாக் 3-ம் தளத்தில் ஜன்னலின் சன்ஷேட் இடிந்து விழுந்ததில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். அதனைத் தொடர்ந்து நேற்று நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அதிகாரிகள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கள ஆய்வு மேற்கொள்ள சென்றனர். அதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
பின்னர் போலீஸ் பாதுகாப்புடன், பொதுமக்கள் விரும்பும் பகுதிகளில் வீடு வீடாக சென்று, மயிலாப்பூர் தொகுதி எம்எல்ஏ மயிலை வேலு முன்னிலையில் பயனாளிகளிடமிருந்து பெயர், அடையாள ஆவணங்கள் உள்ளிட்ட விவரங்களை சேகரிக்க தொடங்கினர். இது தொடர்பாக நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அதிகாரிகளிடம் கேட்டபோது, “இப்பகுதியில் ஆய்வு செய்தால் தான் வாரிய நிலத்தின் எல்லை தெரியும். எத்தனை குடும்பங்கள் உள்ளன என்பது தெரியும்.
அதன் பிறகு தான் இந்த இடத்தில் எத்தனை வீடுகள் கட்ட முடியும், அதற்கு எவ்வளவு நிதி தேவை என்பதை முடிவு செய்து, அரசுக்கு நிதி கேட்டு கருத்துரு அனுப்ப முடியும். தரை தளம் மற்றும் முதல் தளம் கொண்ட பகுதியில் மட்டும் ஆய்வுக்கு மக்கள் அனுமதிக்கவில்லை.
மற்ற இடங்களில் மக்கள், கட்டிடத்தின் நிலை, பாதுகாப்பின்மையை உணர்ந்து ஆய்வுக்கு ஒத்துழைப்பு அளித்து வருகின்றனர். இந்த திட்டப்பகுதியில் இருந்து இதுவரை ரூ.10 கோடிக்கும் மேல் பராமரிப்பு கட்டணம் செலுத்தப்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.