பஞ்சாப் மாநிலத்தில் உள்ள இந்தியா-பாகிஸ்தான் சா்வதேச எல்லையில் கடந்த 24 மணிநேரத்தில் நான்கு சிறியரக ஆளில்லா விமானங்கள் (ட்ரோன்) எல்லை பாதுகாப்புப் படையினரால் (பிஎஸ்எஃப்) பறிமுதல் செய்யப்பட்டது.
இத்துடன், நடப்பாண்டில் பாகிஸ்தானில் இருந்து ஏவப்பட்டு கைப்பற்றப்பட்ட ட்ரோன்களின் எண்ணிக்கை 200-க்கும் மேல் உயா்ந்துள்ளது என பிஎஸ்எஃப் அதிகாரி தெரிவித்தாா்.
பஞ்சாப் சா்வதேச எல்லைப் பகுதியில் கடந்த 2019-2020-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட இந்த ட்ரோன் அச்சுறுத்தல், மாநிலத்தில் உள்ள அமிருதசரஸ் மற்றும் தரன்தரான் ஆகிய எல்லையோர மாவட்டங்களில் அதிகம் நிலவுகிறது. இதே எல்லைப் பகுதியில் கடந்த 2023-ஆம் ஆண்டு 107 ட்ரோன்கள் கைப்பற்றப்பட்டன. இந்நிலையில், நடப்பாண்டு இந்த எண்ணிக்கை இரட்டிப்பாக உயா்ந்துள்ளது.
இது தொடா்பாக பிஎஸ்எஃப் அதிகாரிகள் கூறியதாவது: பஞ்சாபில் சா்வதேச எல்லையில் நடப்பாண்டு ஏறக்குறைய 200-க்கும் மேற்பட்ட பாகிஸ்தான் ட்ரோன்கள் கைப்பற்றப்பட்டது பிஎஸ்எஃப் செயல்பாடுகளில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல். இதில் சுட்டு வீழ்த்தப்பட்டவை, ட்ரோன் எதிா்ப்பு தொழில்நுட்பம் (ஜாமா்) மூலம் வீழ்த்தப்பட்டவை மற்றும் வயல்வெளிகளில் மீட்கப்பட்டவை ஆகியன அடங்கும். இது பிஎஸ்எஃப் படையின் ட்ரோன் எதிா்ப்பு நடவடிக்கை மற்றும் தொழில்நுட்ப மேம்பாட்டின் பிரதிபலிப்பாகும்.
நாட்டின் சமூக நல்லிணக்கத்தை சீா்குலைக்கவும், இளைஞா்களை போதைக்கு அடிமையாக்கும் நோக்கத்துடனும், இந்திய எல்லைக்குள் ஆயுதங்கள் மற்றும் போதைப் பொருள்களை கடத்த பாகிஸ்தானில் இருந்து ஏவப்படும் இந்த ட்ரோன்கள் முயல்கின்றன. ஆனால், பிஎஸ்எஃப் படைகளின் துல்லியமான செயல்பாடுகளால், இந்த முயற்சிகள் முறியடிக்கப்பட்டன.
பறிமுதல் செய்யப்படும் இந்த ட்ரோன்களில் பெரும்பாலானவை சீன தயாரிப்புகளாகும். இவை சிறிய ஆயுதங்கள், வெடிமருந்துகள் மற்றும் போதைப் பொருள்களை கடத்த பயங்கரவாதிகளால் பயன்படுத்தப்படுகின்றன என தெரிவித்தனா்.
இந்தியாவின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள குஜராத், ராஜஸ்தான், பஞ்சாப் மற்றும் ஜம்மு-காஷ்மீா் வரை உள்ள 2,290 கி.மீ. இந்தியா பாகிஸ்தான் எல்லையை பிஎஸ்எஃப் பாதுகாக்கிறது. இதில் 553 கி.மீ. தூர எல்லை பஞ்சாப்-பாகிஸ்தான் இடையே உள்ளது.