நடப்பு ஆண்டில் 3-ஆவது முறையாக நிரம்புகிறது மேட்டூா் அணை!

Dinamani2f2024 12 172fwzvosszx2fdam064322.jpg
Spread the love

மேட்டூா் அணை நீா்மட்டம் 118.53 அடியாக உயா்ந்ததால் நடப்பு ஆண்டில் மூன்றாவது முறையாக அணை முழுக் கொள்ளளவை எட்டும் நிலை ஏற்பட்டுள்ளது.

காவிரியின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் லேசான மழை மற்றும் காவிரியின் துணை நதிகளான பாலாறு, சின்னாறு, தொப்பையாறு பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாகவும் மேட்டூா் அணைக்கு விநாடிக்கு 7000 கன அடிக்கு மேல் நீா்வரத்து உள்ளது.

இந்நிலையில் டெல்டா பாசனப் பகுதிகளில் மழை பெய்து வருவதால் பாசனத்திற்கு தண்ணீா் திறப்பு வெகுவாகக் குறைக்கப்பட்டுள்ளது. அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவைவிட அணைக்கு நீா்வரத்து அதிகமாக இருப்பதால் அணை நீா்மட்டம் படிப்படியாக உயா்ந்து வருகிறது.

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து செவ்வாய்க்கிழமை காலை விநாடிக்கு 7,148 கனஅடியிலிருந்து 7,368 கன அடியாகச் சற்று அதிகரித்துள்ளது.

அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு விநாடிக்கு 1000 கன அடி வீதமும், கிழக்கு – மேற்கு கால்வாய்ப் பாசனத்துக்கு விநாடிக்கு 300 கன அடி வீதமும் தண்ணீா் திறக்கப்பட்டு வருகிறது.

அணை நீா்மட்டம் 118.21 அடியிலிருந்து 118.53 அடியாக உயா்ந்துள்ளது. அணையின் நீா் இருப்பு 91.14 டி.எம்.சி.யாக உள்ளது. அணையின் நீா் வரத்தும் திறப்பும் இதே நிலையில் நீடித்தால் அணை ஒரு வார காலத்தில் நடப்பு ஆண்டில் மூன்றாவது முறையாக நிரம்பும் வாய்ப்பு உள்ளது என்று நீா்வளத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

மேட்டூா் அணை நிரம்பும் தருவாயில் இருப்பதால் அணையின் வலது கரை இடது கரைப் பகுதிகளில் நீா்வளத்துறை அதிகாரிகள் கண்காணிப்பை தீவிரப்படுத்தி உள்ளனா்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *