புதுடெல்லி: விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான விருத்திமான் சாஹா, அனைத்து பார்மெட் கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். நடப்பு ரஞ்சி கோப்பை சீசன் தான் அவர் பங்கேற்று விளையாடும் கடைசி தொடர்.
கடந்த 2010-ல் இந்திய அணியில் அவர் அறிமுகமானார். மொத்தம் 40 டெஸ்ட் மற்றும் 9 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இந்திய அணிக்காக சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடி உள்ளார். கடந்த ஆண்டு அவர் பிசிசிஐ-யின் வீரர்களுக்கான ஒப்பந்தத்தில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
40 வயதான அவர் கடைசியாக கடந்த 2021-ல் இந்திய அணிக்காக விளையாடி இருந்தார். அதன் பின்னர் இளம் வீரர்களின் வருகை காரணமாக அவருக்கான வாய்ப்பு அணியில் மறுக்கப்பட்டது. கடந்த ஐபிஎல் சீசனில் குஜராத் டைட்டன்ஸ் அணியில் விளையாடி இருந்தார். டெஸ்ட் கிரிக்கெட்டில் 1,353 ரன்கள் எடுத்துள்ளார். 3 சதம் மற்றும் 6 அரை சதங்கள் இதில் அடங்கும்.
“அற்புதமான கிரிக்கெட் பயணம் எனக்கு அமைந்தது. நடப்பு ரஞ்சி சீசன் தான் நான் விளையாடும் கடைசி கிரிக்கெட் தொடர். எனது ஓய்வுக்கு முன்பாக வங்காள அணிக்காக ரஞ்சி தொடரில் இறுதியாக விளையாடுவதை எண்ணி பெருமை கொள்கிறேன். இந்த சீசனை மறக்க முடியாத நினைவாக மாற்றுவோம்.” என சாஹா தெரிவித்துள்ளார்.