திரையரங்க கூட்ட நெரிசலில் பெண் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக நாளை (டிச. 24) ஆஜராக வலியுறுத்தி நடிகர் அல்லு அர்ஜுனுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
நாளை காலை 11 மணிக்கு சிக்கடப்பள்ளி காவல் நிலையத்தில் விசாரணைக்காக ஆஜராக வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஹைதராபாத்திலுள்ள திரையரங்கில் கடந்த 4-ஆம் தேதி திரையிடப்பட்ட புஷ்பா 2 சிறப்புக் காட்சிக்கு காவல் துறையின் அனுமதி பெறாமல், திடீரென்று அல்லு அர்ஜுன் வந்ததால் கூட்ட நெரிசல் ஏற்பட்டு 35 வயது பெண் ஒருவர் மரணமடைந்தார்.
அவரின் 8 வயது மகனும் காயமடைந்து மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்றுவருகிறார்.
இதனிடையே கூட்ட நெரிசலில் சிக்கி பெண் உயிரிழந்த விவகாரத்தில், நடிகர் அல்லு அர்ஜுன் டிச. 13-ஆம் தேதி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
பின்னர் உயர்நீதிமன்ற உத்தரவின் பெயரில் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். தெலங்கானா உயர்நீதிமன்றம் அல்லு அர்ஜுனுக்கு நான்கு வார இடைக்கால ஜாமீன் வழங்கியிருந்தது.
இந்நிலையில், பெண் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த நாளை (டிச. 24) ஆஜராக அல்லு அர்ஜுனுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. சிக்கடப்பள்ளி காவல் நிலையத்தில் அல்லு அர்ஜுனிடம் விசாரணை நடைபெறும் எனத் தெரிகிறது.
இதையும் படிக்க | தேசிய மனித உரிமை ஆணையத் தலைவர் நியமனம்!