ரசிகரைக் கொலை செய்த வழக்கில் கன்னட நடிகர் தர்ஷன் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையிலிருந்து பெல்லாரி சிறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
பரப்பன அக்ரஹார சிறையில் இருந்தவாறு விடியோ காலில் பேசுவது, நாற்காலியில் அமர்ந்து சிகரெட்டுடன் தேநீர் அருந்துவது போன்ற புகைப்படங்கள் வெளியான இரு நாள்களில் அவர் வேறு சிறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
சிறையில் சொகுசு வாழ்க்கையை அனுபவிக்கும் தர்ஷனை வேறு சிறைக்கு மாற்ற வேண்டும் என முதல்வர் சித்தராமையா உள்பட பலர் கோரிக்கை வைத்திருந்தனர். நடிகர் தர்ஷனின் விடியோ கடந்த இரு நாள்களாக சமூக வலைதளங்களை ஆக்கிரமித்துள்ளன.
பிரபல கன்னட நடிகர் தர்ஷன், தனது தோழியும் நடிகையுமான பவித்ரா கெளடாவை சமூக வலைதளத்தில் சீண்டியதாக, தனது ரசிகர் ரேணுகா சாமியைக் (33) கடத்தி கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டார்.
இவ்வழக்கில் பவித்ரா கெளடா, தர்ஷனின் நண்பர்கள், ரசிகர் மன்றத் தலைவர் என 17 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மாநிலத்தின் வெவ்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். பெங்களூரு பரப்பன அக்ரஹார மத்தியச் சிறையில் தர்ஷன், பவித்ரா கெளடா உள்ளிட்ட மூவர் அடைக்கப்பட்டுள்ளனர்.
இதனிடையே சிறை நாற்காலியில் சிகரெட் மற்றும் தேநீர் கோப்பையுடன் தர்ஷன் அமர்ந்துகொண்டு இருக்கும் புகைப்படம் வெளியானது. அவருடன் ரௌடி வில்சன் கார்டன் நாகா மற்றும் தர்ஷனுடைய மேலாளாராக பணிபுரிந்த நாகராஜ் ஆகியோர் அமர்ந்துகொண்டு அரட்டையடிக்கும் காட்சிகள் வெளியானது.
இந்தநிலையில், சிறையில் இருந்தவாறு நடிகர் தர்ஷன் விடியோ அழைப்பில் பேசும் விடியோ வெளியாகியுள்ளது. 25 விநாடிகள் கொண்ட அந்த விடியோவில் தர்ஷன் தனக்கு வேண்டியவருடன் விடியோ அழைப்பில் நலம் விசாரிக்கிறார். பதிலுக்கு மறுமுனையில் இருப்பவரும் தர்ஷனின் உடல்நிலை, வசதிகள் குறித்து கேட்டறியும் வகையில் விடியோ வெளியானது.
நடிகர் தர்ஷனுடன் அமர்ந்து தேநீர் அருந்திய, ஜெகதீஸ் என்னும் ஜெக்கா, லக்ஷ்மன் ஆகியோர் சிவமொக்கா சிறைக்கு மாற்றப்பட்டனர். ரவிஷங்கர், கேசவமூர்த்தி உள்ளிட்ட சிலர் தும்கூரு சிறைக்கு மாற்றப்பட்டனர். இவர்கள் மாற்றுவதற்கான உத்தரவை நீதிமன்றம் பிறப்பித்ததைத் தொடர்ந்து அவர்கள் வெவ்வேறு சிறைகளுக்கு மாற்றப்பட்டனர்.